/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் கிணறுகளில் நீர் எடுத்து விற்பனை! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மறியல்
/
தனியார் கிணறுகளில் நீர் எடுத்து விற்பனை! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மறியல்
தனியார் கிணறுகளில் நீர் எடுத்து விற்பனை! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மறியல்
தனியார் கிணறுகளில் நீர் எடுத்து விற்பனை! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மறியல்
ADDED : ஏப் 27, 2024 12:24 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரில், தனியார் கிணற்றில் இருந்து, விற்பனைக்காக அதிகளவு நீர் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி நகரில், குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் கிணறுகளில் இருந்து, அதிகளவு நீர் எடுத்து விற்பனைக்கு கொண்டு செல்வதால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். புகார்கள் எழுந்தாலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி, கோட்டூர் ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள், நேற்று மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்துறை அதிகாரிகள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகராட்சி, 33வது வார்டுக்கு உட்பட்ட கோட்டூர் ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி மற்றும் மருதமலை ஆண்டவர் லே-அவுட் பகுதியில், தனியார் கிணறுகளில் இருந்து வணிக நோக்கத்தோடு நாளொன்றுக்கு, 25 லோடுகளுக்கு மேலாக கனரக டேங்கர் லாரிகளில் விற்பனைக்காக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால், அப்பகுதியில் உள்ள பொதுக்கிணறுகள், வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இது மட்டுமல்லாமல் எவ்வித அனுமதியும் பெறாமல், இரவு, பகலாக நீரேற்றிச் செல்லும் வாகனங்களனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; ரோடும் பழுது ஏற்படுகிறது.
தனியார் கிணறுகளில் நீர் எடுத்து விற்பதால், 33, 34,35 மற்றும், 36வது வார்டுகளில் வசிக்கும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நீர் வழங்கும் நகராட்சி பொதுக்கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மக்கள் கூறினர்.
இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டத்துக்கு பின் நீர் எடுத்துச் சென்ற லாரியை மக்கள் தடுத்து நிறுத்தினர். லாரி டேங்கரில் இருந்து நீரை, கிணற்றுக்குள் விட்ட பின், லாரியை அனுப்பினர்.

