/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் படிப்புக்கான கருத்தரங்கம்
/
தொழில் படிப்புக்கான கருத்தரங்கம்
ADDED : மே 12, 2024 11:00 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அறிவுசார் மையத்தில், தொழிற் படிப்புக்கான கருத்தரங்கம் நடந்தது.
மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், நூலகம் மற்றும் அறிவுசார் மையம், மணிநகர் அரசு உயர்நிலைப் பள்ளி எதிரே செயல்படுகிறது. தற்போது இந்த மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நான்காவது குரூப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பிளஸ் 2 மாணவ, மாணவியர் பயன் பெறும் வகையில், தொழில் கல்வி குறித்து, அறிவு சார் மையத்தில் கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா தலைமை வகித்தார். ஜெயராமன் வரவேற்றார். 'அடுத்து என்ன படிக்கலாம்' என்ற தலைப்பில், தொழில் படிப்புகளான பட்டயக் கணக்கர் (சி.ஏ.,), காஸ்ட் அக்கவுண்ட்ஸ் (சி.எம்.ஏ.,) மற்றும் கம்பெனி செயலர்கள் (சி.எஸ்.,) போன்ற படிப்புகளுக்கான வழிகாட்டி நடத்தப்பட்டது. கோவை பட்டய கணக்காளர்கள் அமைப்பிலிருந்து ஆடிட்டர் சண்முகம், காஸ்ட் அக்கவுண்ட்ஸ் அமைப்பில் இருந்து கார்த்திக் ஆகியோர் பங்கேற்று, தொழில் படிப்பு தொடர்பான, பல்வேறு விவரங்களை விளக்கி கூறினர்.
கருத்தரங்கம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, முன்னாள் அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் செய்திருந்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் சாமிநாதன் நன்றி கூறினார்.