/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டல் உணவு கழிவு அடைப்பால் சாக்கடை தேக்கம்; கழிவு மேலாண்மையை கண்டுகொள்ளுமா மாநகராட்சி?
/
ஓட்டல் உணவு கழிவு அடைப்பால் சாக்கடை தேக்கம்; கழிவு மேலாண்மையை கண்டுகொள்ளுமா மாநகராட்சி?
ஓட்டல் உணவு கழிவு அடைப்பால் சாக்கடை தேக்கம்; கழிவு மேலாண்மையை கண்டுகொள்ளுமா மாநகராட்சி?
ஓட்டல் உணவு கழிவு அடைப்பால் சாக்கடை தேக்கம்; கழிவு மேலாண்மையை கண்டுகொள்ளுமா மாநகராட்சி?
ADDED : மார் 04, 2025 06:30 AM

கம்பத்தால் காத்திருக்கு ஆபத்து
என்.எஸ்ஆர்.ரோடு, வி.கே.கே.மேனன் ரோடு, அருணா திருமண மண்டபம் அருகே, எஸ்.பி.ஐ., வங்கி எதிரே, சாலையோரத்தில் பழைய மின்கம்பம் போடப்பட்டுள்ளது. சாலையில் நீட்டிக்கொண்டிருக்கும் கம்பத்தால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
- சிவ சுப்பிரமணியன், சாய்பாபா காலனி.
குழிகளையாவது சீரமையுங்கள்
பாரதி பார்க் ரோடு, சூயஸ் குடிநீர் குழாய் பதிப்பிற்காக, கடந்த ஆறு மாதங்களாக சாலை தோண்டப்பட்டது. சாலை முழுவதும் குழிகளாக உள்ளது. புதிய சாலை அமைக்க வேண்டும். இல்லையெனில், குழிகளை மட்டுமாவது தார் ஊற்றி சீரமைக்க வேண்டும்.
- ராஜ்குமார், பாரதி பார்க் ரோடு.
குண்டும், குழியுமான ரோடு
கவுண்டம்பாளையம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அரசு குடியிருப்பு வளாகத்தில் தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். மேற்கு மண்டல மாநகராட்சி அதிகாரிகளுக்கு, பலமுறை புகார் செய்தும் சீரமைக்கவில்லை.
- சண்முகம், கவுண்டம்பாளையம்.
மேம்பாலத்தில் தெரியும் கம்பிகள்
சிங்காநல்லுார் - வெள்ளலுார் செல்லும் மேம்பாலத்தில் சாலையின் நடுவே சேதமடைந்துள்ளது. கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சேதம் அடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் சாலையை கடக்கின்றனர். விபத்து நடக்கும் முன், சாலையை சீரமைக்க வேண்டும்.
- தங்கவேல், சிங்காநல்லுார்.
நாய்களால் துாக்கம் போயிருச்சு
பீளமேடு, 56வது வார்டு, திருமகள் நகர் சாலையில் சுற்றித்திரியும் நாய்களால், தெருக்களில் நடமாடவே குழந்தைகள், முதியவர்கள் அஞ்சுகின்றனர். இரவு முழுவதும் குரைக்கும் நாய்களால், நிம்மதியாக துாங்க முடியவில்லை. சாலையின் குறுக்கே ஓடும் நாய்களால், அதிக விபத்து நடக்கிறது.
- யுவராஜ், திருமகள் நகர்.
விரைந்து பணியை முடிக்கணும்
ஒண்டிப்புதுார், 57வது வார்டு, தாகூர் நகர் விரிவாக்கம் செல்லும் சாலை அனைத்தும், பாதாள சாக்கடை வேலை காரணமாக மூடப்பட்டுள்ளது. பள்ளி வாகனம், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. விரைந்து பணிகளை முடித்து, சாலையை சீரமைக்க வேண்டும்.
- சவுண்டப்பன், தாகூர் நகர்.
சாக்கடையில் ஓட்டல் கழிவு
பீளமேடு புதுார் - அவிநாசி ரோடு சந்திப்பில், அருகிலுள்ள ஓட்டலின் கழிவுகளை தினமும் சாக்கடை கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால், உணவு கழிவுகள் அடைத்து சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதி முழுவதும், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- யுவராஜ், திருமகள் நகர்.
துரத்தும் நாய்கள்
இடையர்பாளையம், பூம்புகார் நகர், வைரவர் வீதியில், பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில், பைக்கில் செல்வோரை துரத்தி அச்சுறுத்துகின்றன. குழந்தைகளை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன.
- சரத்குமார், பூம்புகார் நகர்.
நெருக்கடிக்கு தீர்வு எப்போது?
மேட்டுப்பாளையம் ரோட்டில், பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு அருகே பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சாலை ஓரங்களில் அதிக ஆக்கிரமிப்புகள் இருப்பதுடன், வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. காலை, மாலை வேளையில் போக்குவரத்து பாதிக்கிறது.
- மனோகரன், ஜி.என்.மில்ஸ்.
பள்ளி அருகே சுகாதாரமில்லை
கோவை மாநகராட்சி, 82வது வார்டு, ஒப்பணக்கார வீதி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் ஓரத்தில், சிலர் குப்பையை வீசிச்செல்கின்றனர். குப்பையை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி அருகே திறந்தவெளியில் குப்பை கொட்டுவோர் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரத்குமார், டவுன்ஹால்.