/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடைக்கு இணைப்பு வேண்டும்: மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை
/
பாதாள சாக்கடைக்கு இணைப்பு வேண்டும்: மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை
பாதாள சாக்கடைக்கு இணைப்பு வேண்டும்: மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை
பாதாள சாக்கடைக்கு இணைப்பு வேண்டும்: மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை
ADDED : செப் 11, 2024 10:54 PM

கோவை : பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்தது. மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மனுக்கள் பெற்று, துறை ரீதியான நடவடிக்கைக்கு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
மொத்தம், 65 மனுக்கள் பெறப்பட்டன. குனியமுத்துாரை சேர்ந்த ஒருவர், தனது மகளின் பிறப்பு சான்றிதழில் திருத்தம் கோரி விண்ணப்பித்தார். உடனடியாக திருத்தம் செய்து, சான்று வழங்கப்பட்டது.
வடிகால் விடுபட்டிருக்கு
கணபதி தென்றல் நகர் பொது நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'வடக்கு மண்டலம், 20வது வார்டு, தென்றல் நகரில் மழை நீர் வடிகால் கட்டப்பட்டது. அதில், 200 மீட்டர் துாரத்துக்கு கால்வாய் கட்டும் பணி விடுபட்டிருக்கிறது. கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுத்தோம்; விடுபட்ட பகுதியில் இன்னும் கால்வாய் கட்டவில்லை.
இதேபோல், 40 அடி சாலை, 80 அடி சாலையை தார் ரோடாக போட்டுத்தர வேண்டும்' என கூறியுள்ளனர்.
சேம்பர் கட்டியாச்சு
தியாகி சண்முகா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'வார்டு எண்: 61ல் சிங்காநல்லுார் தியாகி சண்முகா நகர் உருவாகி, 40 ஆண்டுகளாகி விட்டது. ஆறு அடுக்குமாடி குடியிருப்புகள், 32 தனி வீடுகள் இருக்கின்றன.
இன்னும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
மழை நீர் வடிகால் வசதி இல்லை; மழைக்காலங்களில் ரோட்டில் தண்ணீர் தேங்குகிறது.
பாதாள சாக்கடைக்கு சேம்பர் கட்டி பல வருடங்களாகி விட்டது; இன்னும் வீட்டு இணைப்பு வழங்கவில்லை.
கடந்த, 40 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே ரோடு போடப்பட்டு உள்ளது; தற்போது மோசமாக இருக்கிறது.
பழைய ரோட்டை பெயர்த்தெடுத்து விட்டு, புதிதாக போட வேண்டும். 'ரிசர்வ் சைட்'டை சுத்தப்படுத்தி, பூங்கா அமைத்து தர வேண்டும்' என, கோரியுள்ளனர்.
பூங்கா கட்டுங்க!
கோவைப்புதுார் ஸ்ரீவிக்னேஸ்வரா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், '91வது வார்டு தொட்டராயன் கோவில் வீதியில், ஸ்ரீவிக்னேஸ்வரா நகர் உள்ளது.
அருகாமையில் மதினா நகர் மேற்கு, ராஜம் லே-அவுட், கவுரி நகர், மதினா நகர் கிழக்கு ஆகிய பகுதிகள் உள்ளன. பூங்கா அமைக்க ஒதுக்கியிருந்த இடத்தில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. அவை அகற்றப்பட்டு வேலி போடப்பட்டுள்ளது. அவ்விடத்தில் சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டும்' என, கூறியுள்ளனர்.
நுாலகம் கட்டித்தாங்க
அம்மன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வழங்கிய மனுவில், 'கோவை மாநகராட்சி, 85வது வார்டு அம்மன் நகரில், 'ரிசர்வ் சைட்' மீட்கப்பட்டு, வேலி அமைக்கப்பட்டிருக்கிறது.
அங்கு சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் பூங்கா அமைத்துத் தர வேண்டும். 'நமக்கு நாமே' திட்டத்தில் அமைப்பதற்கு சங்கம் சார்பில், முழு ஒத்துழைப்பு தருகிறோம்' என கூறியுள்ளனர்.