/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடை மூடி சேதம்; வாகன ஓட்டுநர்கள் அவதி!
/
பாதாள சாக்கடை மூடி சேதம்; வாகன ஓட்டுநர்கள் அவதி!
ADDED : மார் 25, 2024 12:04 AM

போக்குவரத்து விதிமீறல்
பொள்ளாச்சி, வெங்கட்ரமணன் வீதி பள்ளி அருகே, ரோட்டில் லாரியில் பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு 'ஒன்வே'யில் பயணிக்கிறது. இதனால், எதிரில் வரும் வாகனங்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன் விபத்து அபாயம் உள்ளது. எனவே, இது போன்ற விதிமீறும் வாகனங்கள் மீது, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -பிரபு, பொள்ளாச்சி.
சாக்கடை மூடி சேதம்
பொள்ளாச்சி நகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட ஜோதிநகர், நடராஜ் செட்டியார் வீதியில் உள்ள பாதாள சாக்கடை மூடி பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், ரோட்டில் செல்லும் பைக் ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, பாதாள சாக்கடை மூடியை விரைவில் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
- -ஷோபனா, பொள்ளாச்சி.
மின்கம்பம் சேதம்
கிணத்துக்கடவு, நரேன் நகர் அருகில் உள்ள மின் கம்பத்தின் கீழ் பகுதி சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் எப்போது வேண்டுமானாலும் மின் ஒயர்கள் அறுந்து விழ வாய்ப்புள்ளது. எனவே, மின் வாரியத்துறை அதிகாரிகள் இந்த மின்கம்பதை மாற்றியமைக்க வேண்டும்.
- -அருண், கிணத்துக்கடவு.
இடையூறாக வாகனங்கள்
தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை - பழநி ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்தி, உடுமலை.
பள்ளி அருகே குப்பை
கிணத்துக்கடவு, பெரியார் நகர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே, அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால், பள்ளி அருகே துர்நாற்றம் ஏற்படுகிறது. மாணவர்கள் பாதிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, குப்பை கொட்டுவதற்கு மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும்.
- -ரவி, கிணத்துக்கடவு.
'குடி'மகன்கள் தொல்லை
உடுமலை ஏரிப்பாளையம் பகுதியில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலைகளில் 'குடி'மகன்கள் குடித்து விட்டு மதுபாட்டில்களை வீசிச்சென்று விடுகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
வேகத்தடை பட்டையால் அவதி
பொள்ளாச்சியில், பாலக்காடு ரோட்டில் பல இடங்களில் புதிதாக, பட்டையான வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. திட்டு போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, அதிர்வு அதிகரித்துள்ளது. வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுவதுடன், வாகனமும் பழுதடைகிறது. வேகத்தடை அளவை குறைக்க வேண்டும்.
- ஜெயபாஸ்கர், பொள்ளாச்சி.
துார்வார வேண்டும்
உடுமலை பழநி ரோட்டில், ஸ்ரீ நகர் சந்திப்பில் மழைநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இக்கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார், உடுமலை.
ரோட்டை சீரமைக்கணும்
உடுமலை அருகே மலையாண்டிபட்டிணத்திலிருந்து கண்ணம்மநாயக்கனுார் செல்லும் ரோடு மிகவும் சிதிலமடைந்துள்ளது.ரோட்டை மறைத்து புதர் செடிகள் வளர்ந்துள்ளதால், இரவு நேரங்களில் வளைவுகளில் எதிரே வரும் வாகனங்களும் தெரிவதில்லை. இந்த ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும்.
- கணேசன், கண்ணம்மநாயக்கனுார்.
வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
உடுமலை, கணக்கம்பாளையம், பி.வி.லே - அவுட் ரோடு மோசமாக உள்ளது. வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி 'பஞ்சர்' ஆவதோடு, வாகன ஓட்டுனர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த ரோட்டை ஊராட்சி நிர்வாகத்தினர் சரிசெய்ய வேண்டும்.
- லிங்கேஸ்வரன், கணக்கம்பாளையம்.
ரோட்டில் குப்பை
உடுமலை, சாஸ்தா நகரில் குப்பைக்கழிவுகளை ரோட்டில் கொட்டுகின்றனர். தெருநாய்கள் அவற்றை இழுத்து குடியிருப்புகளின் அருகே பரப்புகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி சுகாதாரத்துறையினர் இந்த குப்பை, கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விக்னேஷ், உடுமலை.
அடையாளம் இல்லை
உடுமலை, உழவர் சந்தை எதிர்புறம் ரோட்டில் வேகத்தடை அடையாளம் இல்லாமல் இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, விபத்துகளை தடுக்கும் வகையில், அங்குள்ள வேகத்தடைக்கு வெள்ளைக்கோடு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெயசித்ரா, உடுமலை.
அறிவிப்பை மறைக்கும் புதர்
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கோதவாடி பிரிவில், ரோட்டோரம் உள்ள அறிவிப்பு பலகை அருகே, செடி, கொடிகள் படர்ந்து புதர் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த இடத்தை சுத்தம் செய்து, வாகன ஓட்டுநர்களின் பார்வைக்கு அறிவிப்பு தெரியும் படி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -சதீஷ், கிணத்துக்கடவு.

