/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்தோஷத்தில் 'மிதக்கும்' உடன்பிறப்புகள்
/
சந்தோஷத்தில் 'மிதக்கும்' உடன்பிறப்புகள்
ADDED : ஏப் 02, 2024 12:44 AM
கோவை லோக்சபா தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தி.மு.க., பூத் கமிட்டியினரின் செலவுக்கு முதல்கட்ட பணம் பட்டுவாடா துவங்கியிருக்கிறது. சந்தோஷத்தில் 'மிதக்கும்' உடன்பிறப்புகள் பகைமை மறந்து தேர்தல் பணியை துவக்கியுள்ளனர்.
கோவை லோக்சபா தொகுதியில், 2,048 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு சாவடிக்கும், தி.மு.க., சார்பில், 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இவர்களே, பூத் வாரியாக வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து, எத்தனை வீடுகள் உள்ளன; எத்தனை வாக்காளர்கள் இருக்கின்றனர்.
இடம் பெயர்ந்த வாக்காளர்கள்; இறந்தவர்கள் விபரம் சேகரிப்பர். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, வாக்காளர்களை நேரில் சந்தித்து, ஓட்டு சேகரிப்பர். தேர்தல் நேரத்தில் இவர்களது பணி அளப்பரியது; கட்சிக்கு பூத் கமிட்டியே அச்சாணி. அதனால், இவர்களுக்குரிய செலவுத் தொகையை, வேட்பாளர் தரப்பில் இருந்து அவ்வப்போது வழங்கப்படும்.
தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கோவையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணா மலை போட்டியிடுவதால், களம் கடுமையாகி இருக்கிறது. கண்டிப்பாக ஜெயித்தாக வேண்டுமென, தி.மு.க., தலைமை உத்தரவிட்டிருக்கிறது. பொறுப்பு அமைச்சராக, டி.ஆர்.பி. ராஜா நியமிக்கப்படடுள்ளார்.
வார்டு கிளை செயலாளருக்கு ரூ.15 ஆயிரம், இவருக்கு கீழ் செயல்படும் நிர்வாக அமைப்பில், 11 பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு தலா ரூ.3,000 வீதம் வழங்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டியில் பி.எல்.ஓ., 2 என அழைக்கப்படுபவருக்கு தலா ரூ.2,000, ஐந்து உறுப்பினர்களை தினமும் அழைத்துச் சென்றால், அவர்களுக்கு தலா, 300 ரூபாய் வழங்க வேண்டும்.
ஏழு பூத்களுக்கு ஒரு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. பகுதி கழக செயலாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வினியோகிக்கப்பட்டு உள்ளது. இது முதல்கட்டம். ஓட்டுப்பதிவு முடியும் வரை அடுத்தடுத்த கட்டங்களாக பணம் சப்ளையாகும்.
பகைமையை மறந்து, அதிருப்தியை ஓரங்கட்டி வைத்து, தேர்தல் பணியாற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருந்தனர்; பணம் பட்டுவாடா செய்ததை தொடர்ந்து, கட்சியினர் சந்தோஷத்தில் பணியை துவக்கி விட்டனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

