வழிகாட்டி பலகைகள் மாயம் வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
வழிகாட்டி பலகைகள் மாயம் வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம்
ADDED : ஏப் 29, 2026 09:01 PM
வால்பாறை: வால்பாறையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகை மாயமானதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
ஆழியாறு முதல் வால்பாறை வரையான மலைப்பாதையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சில இடங்களில் வழிகாட்டி பலகை அகற்றப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியில் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணியர் வழித்தடம் தெரியாமல் குழப்பமடைகின்றனர்.
மக்கள் கூறியதாவது:
வால்பாறையில் இருந்து மாதா கோவில் பிரிவு (ஆறு முக்கு ரோடு) பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சோலையாறு அணை செல்லும் ரோட்டில் ஏற்கனவே வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையை காணவில்லை.
இதனால், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வழித்தடம் தெரியாமல் குழப்பமடைகின்றனர். கோடை விடுமுறையில் சுற்றுலா வாகனங்கள் அதிகம் வருகின்றன. இந்நிலையில் இடையிடையே வழிகாட்டி பலகை இல்லாததால், ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுபட்ட இடங்களில் வழிகாட்டி பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘வால்பாறையில் தேவையான இடங்களில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. சில இடத்தில் சிறிய அளவிலான வழிகாட்டி பலகை விரைவில் வைக்கப்படும். சாலை விதிகளை மதித்து சுற்றுலா பயணியர் வாகனங்களை இயக்க வேண்டும். வால்பாறை – ஆழியாறு ரோட்டில் கொண்டைஊசி வளைவுகளுக்கு இடையே வைக்கப்பட்டுள்ள குவி கண்ணாடிகளை சுற்றுலா பயணியர் சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,’ என்றனர்.
