/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: விவசாயிகள், அதிகாரிகள் அதிர்ச்சி
/
சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: விவசாயிகள், அதிகாரிகள் அதிர்ச்சி
சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: விவசாயிகள், அதிகாரிகள் அதிர்ச்சி
சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: விவசாயிகள், அதிகாரிகள் அதிர்ச்சி
ADDED : ஆக 01, 2024 01:50 AM
கோவை : மதகை, 140 செ.மீ., திறந்து நீரை வெளியேற்றியதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம், 42 அடியாக சரிந்தது. இது தமிழக அதிகாரிகள், விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது சிறுவாணி அணை. பாதுகாப்பு காரணங்களை கூறி, கேரள நீர்பாசனத்துறை அணையின் முழுக்கொள்ளளவான, 50 அடி நீர் தேக்காமல், 45 அடி வரை மட்டுமே தேக்கி வருகிறது.
கடந்த, 19ம் தேதி அணையின் நீர்மட்டம், 42 அடியாக இருந்த போது, கேரள அதிகாரிகள் அணையில் இருந்து, 1,000 கனஅடி நீரை வெளியேற்றினர்.
நீர்வரத்து அதிகமாக இருந்ததால், நீர் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது. மழை குறைந்ததால், நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.
கடந்த, 26ம் தேதி மழையால் அணையின் நீர்மட்டம், 43.23 அடியாக உயர்ந்தது. மழை அதிகம் இருந்த போதும், நீர்மட்டம் இறங்கு முகத்தில் இருந்தது.
கேரள நீர்பாசனத் துறை அதிகாரிகள், சிறுவாணி அணையின் மதகை, 10 செ.மீ., வரை திறந்து நீரை வெளியேற்றியதால், நீர்மட்டம் குறைந்தது தெரிந்தது.
நேற்று முன்தினம், அணையின் நீர்பிடிப்பு பகுதியில், 162 மி.மீ., மழை பொழிந்ததால், நீர்மட்டம், 44.08 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 10.158 கோடி லிட்டர் நீர், குடிநீருக்காக எடுக்கப்பட்டது.
அணையின் நீர்மட்டம், 45 அடியை எட்டும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் அணையின் மதகை, 140 செ.மீ., திறந்து பல ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றி உள்ளனர்.
இதன் காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம், 1.7 அடி குறைந்து, 42.38 அடியாக இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அடிவாரத்தில், 7 மி.மீ., அணைப்பகுதியில், 17 மி.மீ., மழைப்பொழிவு பதிவானது.
அணையின் நீர்மட்டம், 42.38 அடியாக இருந்தது. அணையில் இருந்து 10.301 கோடி லிட்டர் நீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டது. நீர்மட்டத்தை, 45 அடி கூட உயர விடாமல், நீரை திறந்து விடுவது, தமிழக அதிகாரிகள் மத்தியில் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரிடமும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அணையின் நீர்மட்டத்தை, 50 அடியாக உயர்த்த தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள், தற்போது, 45 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தவும் 'செக்' வைக்கின்றனர். இதைத் தடுக்க, தமிழக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.