/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைகிறது சிறுவாணி அணை நீர்மட்டம்
/
குறைகிறது சிறுவாணி அணை நீர்மட்டம்
ADDED : ஆக 04, 2024 11:05 PM
கோவை : மழைப்பொழிவு குறைந்து விட்டதால், சிறுவாணி அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
கோவையின் முக்கிய நீராதாரங்களுள் ஒன்று, சிறுவாணி அணை. பாதுகாப்பு காரணங்களுக்காக அணையின் முழுக்கொள்ளளவான, 50 அடி நீரை தேக்காமல், 45 அடி மட்டுமே நீரை தேக்கி வருகிறது, கேரள நீர்பாசனத் துறை.
ஆனால், கடந்த மாதம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், மழை அதிகம் பொழிந்த போதும், நீர்மட்டத்தை, 45 அடி அளவுக்கு கூட, உயர விடாமல் கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் நீரை திறந்து விடுகின்றனர். இது விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
குறிப்பாக கடந்த மாதம், 29ம் தேதி ஒரே நாளில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், 162 மி.மீ., மழை பொழிந்து, அணையின் நீர்மட்டம், 44 அடி உயர்ந்தது.
அதன்பின் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இறங்குமுகத்திலேயே இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் குறைந்தளவு மழைப்பொழிவு இருந்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அடிவாரம் மற்றும் அணைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லை. அணையின் நீர்மட்டம், 41.82 அடியாக இருந்தது. அணையில் இருந்து 10.452 கோடி லிட்டர் நீர், குடிநீருக்காக எடுக்கப்பட்டது.
இந்நிலையில், வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக, 5 செ.மீ., மட்டும் திறக்க வேண்டிய சிறுவாணி அணையின் மதகை, கேரள நீர்பாசனத்துறை தொடர்ந்து, 10 செ.மீ., அளவுக்கு திறந்து வைத்துள்ளது. இதன் காரணமாகவே, அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.