ADDED : ஆக 06, 2026 02:41 PM

“அட… இது நம்ம வீட்டுல இருந்த பொருள் மாதிரியே இருக்கே!” – இப்படிச் சொல்ல வைக்கும் அளவுக்கு, நிஜ வாழ்க்கைப் பொருட்களை குட்டி குட்டியாக உருவாக்கி வருகிறார் உக்கடம் கமருனிஷா.
சின்ன வயதில் அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் விளையாடுவது கமருனிஷாவுக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம் ஸ்மார்ட்போன் உலகத்ல நுழைஞ்ச பிறகு, சமையல் வீடியோக்கள் மேல ஆர்வம் அதிகமாச்சு.
வெஜ்ஜா நான்வெஜ்ஜா?னு கேட்றாதீங்க. சமையல் பண்றதுக்கு யூஸ் பண்ற பாத்திரங்கள், கரண்டி, ஸ்டவ் இதெல்லாம் தான் அவரை அட்ராக்ட் செஞ்சுது. அந்த அயிட்டங்களை இத்தனூண்டு சைஸ்ல செஞ்சு பார்த்தார். மினியேச்சர் ஆர்ட் கிராப்ட் யுனிவர்ஸ் அவரை அப்டியே உள்ள இழுத்துகிச்சு. அஞ்சு வருஷமா அதே கதியா கிடந்து, அந்த கலைல தேர்ச்சி பெற்றார்.
கண்ல பட்ற எந்த பொருளா இருந்தாலும், அதை குட்டி சைஸ்ல சூப்பரா உருவாக்கி அசர வைக்கிறார். மத்தவங்க சொல்ற ஐடியாக்களை வச்சும் மினியேச்சர் பொருள் உருவாக்கி கொடுக்கிறார். ரெசின், மரம், செராமிக், கண்ணாடி பயன்படுத்தி இதுவரை ஆயிரத்துக்கு மேல் மினியேச்சர் பொருள் தயார் செய்திருக்கார்.
அவர் சொல்ல சொல்ல, நான் கேட்க கேட்க.. ஒரு கட்டத்துக்கு மேல கமருனிஷாவுக்கு தாங்க முடியல. “என் தொழிலில் மறக்க முடியாத சம்பவம் ஏதாவது உண்டா?னு கேக்க மாட்டீங்ளா?” என்றார்.
சரி, கேட்டதா நினைச்சுக்குங்க. பதில் சொல்லுங்க, என்றதும் பூவாய் புன்னகைத்தார்.
“கேக், பிஸ்கட்ஸ் தயாரிப்புல புகழ்பெற்ற பிரிட்டானியா கம்பெனி பொருட்களை மினியேச்சர்ல செஞ்சிருந்தேன். அதை கேள்விப்பட்ட கம்பெனி நிர்வாகி ஆள் அனுப்பி வாங்கினார். அச்சு அசல் அவங்க தயாரிப்பு மாதிரியே இருந்தத பாத்து அசந்துட்டார். எனக்கு கால் பண்ணி, ‘எங்க பிராண்ட் பொருட்களை எங்களயே வாங்க வச்சுட்டீங்க, பாராட்டுக்கள்’னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அதே சமயம், காப்பிரைட் சட்டப்படி சில கட்டுப்பாடுகள் இருக்கு அப்டீங்றதையும் தெரிஞ்சுகிட்டேன்” என்றார் கமருனிஷா.
மினியேச்சர் பொருட்களுக்கு உளவியல் ரீதியாகவும் முக்கியத்துவம் இருக்கு. குழந்தைகளுடன் உரையாடவும், அவர்களின் மனதில் புதைந்திருக்கும் உனர்வுகளை தெரிந்து கொள்ளவும் சைக்கியாட்ரிஸ்டுகள் மினியேச்சர் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் பொருட்களை குட்டி வடிவில் பார்க்கும்போது, அவை நம் ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் தூண்டுகின்றன.
மினியேச்சர் பொருட்களுக்காக இவர் திறந்திருக்கும் கடையில் கொலு, ரிட்டர்ன் கிஃப்ட், DIY கிஃப்ட்ஸ் போன்ற தேவைகளுக்காக ஆர்டர்கள் குவிகின்றன. 20 ரூபாயல் இருந்து விலை தொடங்குவதால், பல தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
“மினியேச்சர் என்பது வெறும் பொருள் இல்லை… அது ஒரு நினைவு. ஒரு தலைமுறையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பாலம்” என்கிறார் கமருனிஷா. 90436 64139.
