/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலச்சரிவை தடுக்க மண் ஆணி திட்டம் வல்லுநர் குழு பரிந்துரை
/
நிலச்சரிவை தடுக்க மண் ஆணி திட்டம் வல்லுநர் குழு பரிந்துரை
நிலச்சரிவை தடுக்க மண் ஆணி திட்டம் வல்லுநர் குழு பரிந்துரை
நிலச்சரிவை தடுக்க மண் ஆணி திட்டம் வல்லுநர் குழு பரிந்துரை
ADDED : செப் 10, 2024 02:08 AM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, மண் ஆணி அமைத்தல் திட்டத்தை செயல்படுத்த, வல்லுநர் குழுவினர் பரிந்துரை செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல இரண்டு சாலைகள் உள்ளன.
ஒன்று குன்னூர் வழியாக ஊட்டி செல்லும் சாலை, மற்றொன்று குஞ்சப்பனை வழியாக கோத்தகிரி செல்லும் சாலை.
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில், வியூ பாயிண்ட் மற்றும் குஞ்சப்பனை அருகே 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அண்மையில் கோத்தகிரி சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டு, திட்ட மதிப்பீடு பணியும் செய்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் நிலச்சரிவு, பாறைகள் உருண்டு சாலையில் விழும் பகுதிகள் என 3 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்களில், மண் ஆணி அமைத்தல் மற்றும் கருங்கல் தடுப்பு வலை சுவர் போன்ற திட்டங்களை செயல்படுத்தலாம் என தெரிவித்தனர். இதற்கு ரூ.2 கோடியில் திட்ட மதிப்பீடும் தயார் செய்தனர். இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட உள்ளது. அனுமதி கிடைத்ததும், விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும்.
இந்த மண் ஆணி அமைத்தல் என்பது, செங்குத்தான மலைப் பகுதியில் துளையிட்டு, மண் ஆணி அமைத்து, ஜியோ கிரிட் வழியாக மண்ணின் உறுதித்தன்மையை அதிகரித்து, வலுவூட்டப்பட்ட இரும்பு கம்பிகளை நிலை நிறுத்தும் நவீன தொழில்நுட்பமாகும்.
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலை வழியாக செல்வோர் கவனத்துடன் செல்ல வேண்டும். சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மழை பெய்யும் போது, கூடுதல் கவனத்துடன் பொறுமையாக தான் வாகனங்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-

