ADDED : ஆக 04, 2024 10:35 PM

* மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை கோவில் நடை திறந்தவுடன், அம்மன் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தினர், சிறப்பு பஸ் வசதிகள் செய்திருந்தனர்.
* ஓடந்துறை ஊராட்சி ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியா தேவி கோவில் உள்ளது. ஆடி பெருக்கை முன்னிட்டு, பாலப்பட்டி விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் ராகிக் கஞ்சி கலையங்களை, ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். பின், சிறப்பு பூஜை செய்து, அனைவருக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. ஆடி அமாவாசையை முன்னிட்டு, கோவில் நடை திறந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்பு பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரர், காசி விஸ்வநாதர், கங்கை அம்மன், முருகர், கால பைரவர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டன.
குண்டத்து காளியாதேவி அம்மனுக்கு பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட,16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பூசாரி பழனிசாமி, அருள்வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகியோர் பூஜைகளை செய்தனர். விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.