/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கிரிக்கெட் போட்டி; காலிறுதிக்கு கோவை தகுதி
/
மாநில கிரிக்கெட் போட்டி; காலிறுதிக்கு கோவை தகுதி
ADDED : மே 30, 2024 05:01 AM

கோவை : மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில், கோவை மாவட்ட அணி காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, பல்வேறு மாவட்டங்களில் நடக்கிறது.
இதன் இரண்டாம் சுற்றுப்போட்டியில் கோவை அணி, திருவண்ணாமலை அணியை எதிர்த்து, திருவண்ணமாலை அருணை இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் விளையாடியது. இரண்டு நாள் டெஸ்ட் போட்டியான இதில், டாஸ் வென்ற திருவண்ணாமலை அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸை துவங்கிய கோவை அணியின் கேப்டன் ஹரி பாண்டியா (103) சதம் விளாசினார். நவின் (55), பார்த்திபன் (74) அரை சதம் அடித்தனர்.
தஷிஷ் கண்ணன் (38), தேவ்பிரசாத் (35) ஆகியோர் பொறுப்பாக விளையாடினர். கோவை அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய திருவண்ணாமலை அணியினர், கோவை வீரர் தஷிஷ் கண்ணன் பந்து வீச்சில் தடுமாறினர். அணிக்காக புகழ் (58) மட்டும் தனியாக போராட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர்.
இதனால் திருவண்ணா மலை அணி 117 ரன்களுக்கு சுருண்டது. கோவை அணியின் தஷிஷ் கண்ணன் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். கோவை அணி முதல் இன்னிங்ஸில் 234 ரன்கள் முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை விளையாடிய கோவை அணி, இரண்டாம் நாள் முடிவில் 153 ரன்கள் சேர்த்தது.
நதீர் (46), நவின் (52), பவன்ஸ்ரீ (49) சிறப்பாக விளையாடினர். போட்டி டிராவில் முடிந்ததால், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில், கோவை அணி காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.