/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஸ்கோர்ஸ் சாலை சந்திப்பில் பொதுமக்களை கவரும் சிலைகள்
/
ரேஸ்கோர்ஸ் சாலை சந்திப்பில் பொதுமக்களை கவரும் சிலைகள்
ரேஸ்கோர்ஸ் சாலை சந்திப்பில் பொதுமக்களை கவரும் சிலைகள்
ரேஸ்கோர்ஸ் சாலை சந்திப்பில் பொதுமக்களை கவரும் சிலைகள்
ADDED : செப் 05, 2024 11:38 PM

கோவை:கோவை ரேஸ்கோர்ஸ் சந்திப்பில், தனியார் நிறுவன பங்களிப்பில், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர் சிலையும், இரு கைகளில் உலக உருண்டையை தாங்கும் சிலையும் நிறுவப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலை தீவுத்திடல்களை கண்டறிந்து, தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, கடந்தாண்டு, 11 சாலை தீவுத்திடல்கள் கண்டறியப்பட்டு, தனியாருக்கு வழங்கப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நடப்பாண்டு, 15 இடங்களில் சாலை தீவுத்திடல்கள் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக, ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச்சாலையில் இரு இடங்களில் பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இரு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஓரிடத்தில் ஜல்லிக்கட்டு காளையை ஒரு வீரர் அடக்குவது போலவும், இன்னொரு இடத்தில் இரு கரங்களுக்கு நடுவே உலக உருண்டை சுற்றுவது போலவும் சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன.
இவற்றை, மேயர் ரங்கநாயகி, கலெக்டர் கிராந்திகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் வெற்றிச்செல்வன், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி கமிஷனர் செந்தில்குமரன், உதவி நிர்வாக பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதேபோல், சாலை தீவுத்திடல்களை தங்களது சொந்த செலவில் புதுப்பித்து பராமரிக்க முன்வரும் தனியார் நிறுவனங்கள் மாநகராட்சி நகரமைப்பு பிரிவினரை தொடர்பு கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.