/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோர்ட் உத்தரவை மதிக்காமல் ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தம்!
/
கோர்ட் உத்தரவை மதிக்காமல் ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தம்!
கோர்ட் உத்தரவை மதிக்காமல் ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தம்!
கோர்ட் உத்தரவை மதிக்காமல் ஆக்கிரமிப்பு அகற்றம் நிறுத்தம்!
ADDED : ஏப் 02, 2024 01:00 AM

கோவை;கோவை, புரூக்பாண்ட் ரோட்டுக்கு இணையான ரோட்டில், காமராஜபுரம் குடியிருப்புக்கு அருகில் வி.வி.சி.,லே அவுட் உள்ளது. மொத்தம் 3 ஏக்கர் பரப்பளவில், 1961 ல் நகர ஊரமைப்புத்துறை அங்கீகாரத்துடன் அமைக்கப்பட்ட, இந்த லே அவுட்டில் 33 மனையிடங்கள் பிரித்து விற்கப்பட்டன. லே அவுட் ரோடுக்கான இடங்கள், 1965ல் அப்போதிருந்த உள்ளாட்சி அமைப்பிடம் தானப்பத்திரத்தால் தரப்பட்டுள்ளன.
மாநகராட்சி உருவான பின்பும், 1988 வரை அங்கு ரோடு அமைக்கப்படவில்லை. இதை வைத்து, வெவ்வேறு காலகட்டங்களில் 8840 சதுர அடி நிலம், நான்கு கிரயங்களில் தனிநபர்களுக்கு விற்கப்பட்டது.
ரோடுக்கான இடத்தில் 220 அடி நீளம், 40 அடி அகலத்துக்கு, குடோன் அமைக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
லே அவுட் மனையிட உரிமையாளர்களில் ஒருவரான பொன்னுசாமி, இடத்தை வாங்கிய உரிமையாளர், வாடகைக்கு இருப்பவர் என, பல தரப்பினரும் வழக்குகள் தாக்கல் செய்தனர்.
அது மாநகராட்சிக்குச் சொந்தமான ரோடு இடம் என்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வாங்கிய ஆதாரத்தின் அடிப்படையில், அதை மீட்கக்கோரி, 2017ல் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
நடுரோட்டை மறித்துக் கட்டப்பட்ட, அந்த கட்டடத்தைச் சுட்டிக்காட்டி, 'இது தீண்டாமைச்சுவர்' என்று, தேசிய எஸ்.சி.,-எஸ்.டி., கமிஷனுக்கு 2021ல் புகார் அனுப்பப்பட்டது.
கமிஷன் மற்றும் கலெக்டர் பரிந்துரையின்பேரில், 2021 ஜூலையில் 48 மணி நேரத்தில், ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுமாறு, மாநகராட்சி நோட்டீஸ் கொடுத்தது.
அதற்குப் பெறப்பட்ட தடை வழக்கு உட்பட, அனைத்து வழக்குகளும் இணைத்து நடத்தப்பட்டன. வழக்குகளை விசாரித்து வந்த ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான தடையை நீக்கியதுடன், விரைவாக ஆக்கிரமிப்பை அகற்றுமாறு, மார்ச் 28ல் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அதன்படி, நேற்று (ஏப்.,1) காலையில், இந்த ஆக்கிரமிப்பை அகற்றத் திட்டமிடப்பட்டிருந்தது. கமிஷனர் உத்தரவின்படி, தலா ஏழு பேர் கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. காலை 8:30 மணிக்கு, மத்திய மண்டல அலுவலகத்துக்கு வருமாறு, சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டிருந்தது.
நிறுத்தப்பட்டது பணி
ஆனால் நேற்று காலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கும் முன்பே, காரணம் தெரிவிக்காமலே திடீரென பணி நிறுத்தப்பட்டது. ஆளுங்கட்சி தலையீட்டால் இந்தப் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
ஆக்கிரமிப்பை அகற்றினால், 40 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகன்று, புதிய ரோடு திறக்கப்படும். புரூக்பாண்ட் ரோட்டின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

