/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வலிமை... அதுவே திறமை உடலில் அல்ல உள்ளத்தில்...
/
வலிமை... அதுவே திறமை உடலில் அல்ல உள்ளத்தில்...
ADDED : மே 18, 2024 11:45 PM

மாற்றுத்திறனாளிகள் வீட்டில் முடங்கி இருந்த காலமெல்லாம் பறந்து விட்டது. முழு உடல் தகுதி உள்ள மனிதர்களுக்கு சவால் விடும் அளவிற்கு மாற்றுதிறனாளிகள் கலக்கி வருகின்றனர். கல்வி, விளையாட்டு, தனியார் நிறுவனங்கள், அரசு துறைகள் என பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.
இவ்வாறு தன்னாலும் எல்லாம் முடியும் என சுறுசுறுப்பாக விளையாட்டு, தொழில், கார் டிரைவிங் என, கோவையை சற்றி வருகிறார் மாற்றுத்திறனாளி சதீஷ்குமார்.
அவரை சந்தித்த போது...
''நான் ரத்தினபுரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். பி.காம்., எம்.பி.ஏ., முடித்து, சொந்தமாக தொழில் துவங்க முடிவு செய்தேன். காந்திபுரத்தில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருகிறேன். ஆரம்பத்தில் வீட்டை விட்டு வெளியே வர தயங்கினேன். அதன் பின் மற்றவர்களுக்கும், நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என உணர்ந்தேன்.
முதலில் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. வாலிபால் டீமில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றேன். மலேசியா, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளேன். பின் கால் வலிமை இல்லை என்றாலும், உடலை வலிமைபடுத்த வேண்டும் என ஜிம்மிற்கு சென்றேன்.
அதிலும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளேன். போக்குவரத்திற்காக மாற்றுத் திறனாளிகளுக்கான மொபட்டை பயன்படுத்தி வந்தேன். அப்போது காரை பார்க்கும்போது எல்லாம் எனக்கும் கார் ஓட்ட ஆசை ஏற்பட்டது. சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு காரை ஆல்டர் செய்து தரும் நிறுவனம் இருப்பது தெரிந்தது. உடனே சென்னை புறப்பட்டு சென்று, 2020ம் ஆண்டு காரை வாங்கினேன்.
அவர்களிடம் காரை கொடுத்த போது கைகளால் இயக்குவது போன்று ஆக்ஸ்லேட்டர், பிரேக்கை உருவாக்கி தந்தனர். நண்பர்கள் உதவியுடன் ஒரு மாதத்தில் காரை ஈசியாக ஓட்டி பழகினேன். கார் டிரைவிங்கிற்காக முறையாக லைசன்ஸ் பெற்றேன்.மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சலுகைகள் அதிகம் உள்ளது. அதை பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

