/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதருக்குள் செயல்படும் துணை சுகாதார நிலையம்
/
புதருக்குள் செயல்படும் துணை சுகாதார நிலையம்
ADDED : ஆக 14, 2024 02:18 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அரசு துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் புதர் சூழ்ந்து காணப்படுவதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, அரசம்பாளையம் ஊராட்சியில், மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியை சுற்றிலும் உள்ள கிராம மக்கள், மருத்துவ வசதிக்காக கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோவை சென்று வந்தனர். இப்பகுதி மக்கள் நலன் கருதி அரசம்பாளையத்தில், கடந்தாண்டு, 38.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அரசு துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது.
முழுமையாக ஓராண்டு நிறைவடைவதற்குள், துணை சுகாதார நிலையத்தை சுற்றிலும் பார்த்தீனிய செடிகள் முளைத்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால், துணை சுகாதார நிலையம் செல்வதை மக்கள் தவிர்த்து, கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
மக்கள் கூறுகையில், 'காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்ல, நீண்ட தூரம் பயணிக்கும் நிலை இருந்தது. இதை தவிர்க்க, அரசம்பாளையத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.
ஆனால், தற்போது சுகாதார நிலையத்தை சுற்றிலும் புதர் நிறைந்து காணப்படுகிறது. இப்படி இருந்தால் சுகாதார நிலையத்துக்கு எப்படி செல்ல முடியும். மக்கள் நலன் கருதி புதர் செடிகளை அகற்றி, துாய்மையாக பராமரிக்க வேண்டும்,' என்றனர்.

