/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு இடங்களில் கார், ஸ்கூட்டரில் திடீர் தீ!
/
இரு இடங்களில் கார், ஸ்கூட்டரில் திடீர் தீ!
ADDED : மே 01, 2024 11:34 PM

போத்தனூர் : இரு சம்பவங்களில் கார், ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈச்சனாரி அடுத்து பை-பாஸ் சாலை சந்திப்பிலிருந்து நேற்று மாலை கார் ஒன்று, கோவை நோக்கி வந்தது. சுமார் நூறு மீட்டர் தொலைவில், காரின் டேஷ்போர்டிலிருந்து புகை வந்துள்ளது.
காரை ஓட்டி வந்தவர், காரை நிறுத்தி உடன் பயணித்த இரு பெண்களுடன் இறங்கினார். சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்தது.
கிணத்துக்கடவு தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
மதுக்கரை போலீசார் விசாரணையில், கோவை, சரவணம்பட்டி அருகே கீரணத்தம், குமரி வீதியை சேர்ந்த கார்த்திகேயன், 35, தனது தாய், மனைவியுடன் பொள்ளாச்சி சென்று திரும்பும்போது சம்பவம் நடந்தது தெரிந்தது.
இன்னொரு சம்பவம்
க.க.சாவடி அடுத்து நவக்கரை அருகே முருகன்பதி தோட்டத்தை சேர்ந்தவர், மோகன் பிரசாத், 25. நேற்று மதியம் தனது ஸ்கூட்டரை, மதுக்கரை மார்க்கெட்டிலுள்ள ஷோரூமில், சர்வீஸ் செய்வதற்காக பாலத்துறை ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.
திடீரென இன்ஜின் அருகே உள்ள ஒயரில் தீப்பிடித்துள்ளது. வாகனத்தை நிறுத்திவிட்டு, மோகன் பிரசாத் கீழிறங்கினார்.
அப்பகுதியிலிருந்தோர் உதவியுடன், தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மளமளவென பரவி, ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து நாசமானது. மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

