/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை கால புலிகள் கணக்கெடுப்பு - புலிகள் காப்பகத்தில் துவக்கம்
/
கோடை கால புலிகள் கணக்கெடுப்பு - புலிகள் காப்பகத்தில் துவக்கம்
கோடை கால புலிகள் கணக்கெடுப்பு - புலிகள் காப்பகத்தில் துவக்கம்
கோடை கால புலிகள் கணக்கெடுப்பு - புலிகள் காப்பகத்தில் துவக்கம்
ADDED : ஜூன் 27, 2024 09:44 PM

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில் கோடை கால புலிகள் மற்றும் மாமிச, தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.
தேசிய புலிகள் கணக்கெடுப்பின், ஒரு பகுதியாக தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு வழிகாட்டுதலின்படி, கோடைகால புலிகள் மற்றும் இதர மாமிச உண்ணிகள், தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு பணி, ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில் நடக்கிறது. கணக்கெடுப்பு பணி, உடுமலை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு வனச்சரகங்களில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா தலைமையில், உயிரியலாளர் மகேஷ்குமார் மற்றும் வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வனச்சரக பகுதிகளில், 34 சுற்றுகளில், 53 நேர்கோட்டுப்பாதைகளில், வரும், 1ம் தேதி வரை இக்கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
பொள்ளாச்சி
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களில், தென்மேற்கு பருவமழை முந்தைய கால மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. வனச்சரக அலுவலர் வெங்கடேஷ், வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகத்தில் கணக்கெடுப்பு பணியை துவக்கி வைத்தார். மாமிச உண்ணிகளான புலி, சிறுத்தை, செந்நாய் போன்ற வனவிலங்குகளின் கால்தடம், எச்சம், மரங்களில் நகக்கீறல்கள் ஆகியவற்றை கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து, வனப்பகுதியில் வனவிலங்குகள் மற்றும் வனப்பகுதிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதா, மாமிச உண்ணிகளுக்கு உணவாகக் கூடிய விலங்கினங்களின் நடமாட்டம், தாவரங்களின் நிலை குறித்தும் கண்காணிக்கப்படுகிறது. இக்கணக்கெடுப்பு பணி, தொடர்ந்து, 8 நாட்கள் நடைபெறும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- - நிருபர் குழு -