ADDED : ஏப் 30, 2024 12:31 AM

கோவை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில், கோடைக்கால பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டுக்கான, பயிற்சி முகாம் நேரு ஸ்டேடியத்தில் நேற்று துவங்கியது.
இதில் கூடைப்பந்து, வாலிபால், ஜிம்னாஸ்டிக், தடகளம், கால்பந்து ஆகிய விளையாட்டுகள் கற்றுத்தரப்படுகின்றன. நேற்று துவங்கிய முகாம், மே, 13ம் தேதி வரை நடக்கிறது.
முகாமில் 150க்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா தெரிவித்தார்.
ஏன் கட்டணம் வசூல்?
தமிழகம் முழுவதும் எஸ்.டி.ஏ.டி., சார்பில், கடந்த ஆண்டு வரை பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்பட்டு வந்தது.
இந்தாண்டு, சென்னைக்கு ரூ.500, மற்ற நகரங்களுக்கு ரூ.200 மற்றும் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது.
இதனால், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள மாணவர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண வசூல் குறித்து விளையாட்டு ஆர்வலர்கள், முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

