/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழகம்... கோவை...! தேசிய சிறுதொழில்கள் தினம்!
/
தமிழகம்... கோவை...! தேசிய சிறுதொழில்கள் தினம்!
ADDED : ஆக 30, 2024 06:44 AM

கடந்த, 2000ம் ஆண்டு சிறுதொழில்களுக்கு ஆதரவு தெரிவித்து, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மத்திய சிறுதொழில் அமைச்சகம், ஆக., 30ம் தேதியை 'தேசிய சிறு தொழில் தினம்' ஆக அறிவித்தது.
குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களை (எம்.எஸ்.எம்.இ.,) பொறுத்தவரை சிறிய தொழில் நிறுவனங்கள் 97 சதவீதம் உள்ளன. மத்திய அரசு தரவுகளின் படி, 2023-24க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 40 சதவீதமும், ஏற்றுமதியில் 45 சதவீதமும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பங்களிக்கின்றன.
தேசிய அளவில் தமிழகமும், மாநில அளவில் கோவையும் சிறு தொழில்களின் அடையாளமாக திகழ்கின்றன. கோவையில் மட்டும், ஒரு லட்சம் சிறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
நிதி உதவி போதாது
கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:
சிறு தொழில் களின் வளர்ச்சியில் தற்போதுள்ள மொத்த உற்பத்தி 40 லிருந்து 45 சதவீதமாகவும், ஏற்றுமதியில், 45 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் அதிகரித்தாலே ஒரு டிரில்லியன் இலக்கை எட்டிவிடலாம். மொத்த மக்கள் தொகையில், 3ல் ஒரு பங்கினர் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். வேலைவாய்ப்பு அதிகம் கொண்டுள்ள துறை இது.
ஆய்வுகளின் படி, 14 சதவீத எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு மட்டுமே வங்கிகள் வாயிலாக நிதி உதவி கிடைக்கின்றன. 37 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவை; ஆனால், 9 லட்சம் கோடி மட்டுமே வங்கிகள் வாயிலாக கிடைத்துள்ளன. 14 சதவீதம் தவிர, பிற நிறுவனங்கள் தனியார் நிதி நிறுவனங்களை நாடி அதிக வட்டி சுமையில் சிக்கி தவிக்கின்றன. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர், எம்.எஸ்.எம்.இ., அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளோம். தவிர, ஜி.எஸ்.டி., மற்றும் மின்சார கட்டணம் சார்ந்த பிரச்னைகளை சரிசெய்யும் பட்சத்தில் சிறு தொழில் நிறுவனங்கள் பெரிய வளர்ச்சியை எட்டும், என்றார்.
கோவை வெட் கிரைண்டர் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் பாலசந்திரன் கூறுகையில், ''தேசிய அளவில் கோவை, சிறு தொழில்களின் அடையாளமாக உள்ளன. உலகளவில் கிரைண்டர் புவிசார் குறியீடு கோவைக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இத்தொழிலை நம்பி 50ஆயிரம் பேர் உள்ளனர். வாழ்வாதாரம் காக்க மின் கட்டணம் சார்ந்த பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். பயன்பாட்டு கட்டணம் செலுத்த தயார். பிக்ஸ்ட் (fixed) கட்டண உயர்வை குறைத்து உதவவேண்டும்,'' என்றார்.
தொழிலாளர் பற்றாக்குறை
சின்ன வேடம்பட்டி தொழில்நிறுவனங்களின் சங்க தலைவர் தேவகுமார் கூறுகையில்,''சின்னவேடம் பட்டி பகுதியில் மட்டும், 3,000 தொழில்நிறுவனங்கள் உள்ளன. கோவையில் அனைத்து தொழில்நிறுவனங்களும் நிறைந்துள்ளன. தமிழக அரசின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார கனவின் செயல்பாட்டை கோவையில் இருந்து தான் துவங்க நிறுவனங்கள் தயாராகவுள்ளன. அதற்கு ஜி.எஸ்.டி, மற்றும் மின்துறை, சாலை வசதி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
பிற மாநில தொழிலாளர்களை நம்பி இருக்கின்றோம்; திறன்மிக்க தொழிலாளர்கள் தேவை என்பதால் அரசு ஒருங்கிணைந்த பயிற்சிகள் அளித்து அதற்கான தீர்வை ஏற்படுத்தவேண்டும்,'' என்றார்.
கிச்சன் உபகரணங்கள் நிறுவன உரிமையாளர் கார்த்திக் கூறுகையில், ''இயந்திர கொள்முதலில் மானியம் வழங்குதல், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் துவக்கத்தில் மட்டுமாவது ஜி.எஸ்.டி., விலக்கு அளித்தல், ஜி.எஸ்.டி., சார்ந்த நடைமுறை சிக்கல்கள், மின்துறை சிக்கல்களை சரிசெய்து கொடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்,'' என்றார்.
ஜி.எஸ்.டி., பயிற்சி அவசியம்
மெட்டல் ஸ்டீல் டோர் உற்பத்தி நிறுவன தொழில்நுட்ப தலைவர் சரவணக்குமார் கூறுகையில்,''ஜி.எஸ்.டி., பொறுத்தவரையில், பொருட்கள் எடுத்து செல்லும் போது அதிகாரிகள் அதை பிடித்து சிறிய பிழைகளுக்கு கூட பெரிய அபராதம் வரியை விதிக்கின்றனர். இதனால், பெரும் சுமை ஏற்படுகிறது. ஜி.எஸ்.டி., குறித்த சரியான புரிதல் சிறுதொழில் நிறுவனங்களுக்கு இல்லை. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக விதிமுறை கூறுகின்றனர். இதை தவிர்க்க, உரிய பயிற்சிகளை தொழில்முனைவோருக்கு அளிக்கவேண்டியது அவசியம். மேலும், ஆட்டோமேசன் சார்ந்தவர்க்கு வழிகாட்டுதல்கள் அரசு தரப்பில் வழங்கவேண்டும்,'' என்றார்.