/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தரங் சக்தி' பயிற்சி கோவை வானில் சாகசம் செய்த விமானப்படையினர்
/
'தரங் சக்தி' பயிற்சி கோவை வானில் சாகசம் செய்த விமானப்படையினர்
'தரங் சக்தி' பயிற்சி கோவை வானில் சாகசம் செய்த விமானப்படையினர்
'தரங் சக்தி' பயிற்சி கோவை வானில் சாகசம் செய்த விமானப்படையினர்
ADDED : ஆக 13, 2024 11:41 PM

கோவை:இந்திய விமானப்படையின் 'தரங் சக்தி' பன்னாட்டு கூட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக, நேற்று விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி நடந்தது.
கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில், 61 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் முதல் முறையாக 'தரங் சக்தி 2024' பன்னாட்டு விமான பயிற்சி ஆக., 6ம் தேதி துவங்கியது.
இதில் இந்திய விமான படையினர், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விமானப்படையினருடன் இணைந்து, பயிற்சி மேற்கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக, ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகள் கண்காட்சி நேற்று துவங்கியது. வரும் 15ம் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியை, தமிழக ஆளுநர் ரவி துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில், 62 அரங்குகளில் பொதுத்துறை மற்றும் தனியார் உற்பத்தி நிறுவனத்தினர், தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
விமான சாகச நிகழ்ச்சி
விமானப்படையினரின் அணிவகுப்பு மற்றும் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய விமான படையின் தரங் ஹெலிகாப்டர்கள், தேஜஸ், சுக்காய், மிக் மற்றும் ஜெர்மனியின் யூரோ பைட்டர் டைப்பூன், ரபேல் ரக விமானங்களில், விமானப்படை வீரர்கள் சாகசங்கள் செய்து அசத்தினர்.
இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி மற்றும் பயிற்சியில் ஈடுபட்ட நாடுகளின் விமானப்படையினர் பங்கேற்றனர்.
விமான பயிற்சியில் பங்கேற்ற பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டு விமானப்படை தலைமை தளபதிகளுக்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஜெர்மனி விமானப்படை தலைலமை தளபதி இங்கோ கெர்ஹார்ட், ஸ்பெயின் தலைமை தளபதி பிரான்சிஸ்கோ பிராகோ கார்போ, பிரான்ஸ் தலைமை தளபதி ஸ்டீபன் மில்லே ஆகியோர் பேசுகையில், 'பயிற்சியின் வாயிலாக பல புது யுக்திகள், நுட்பங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. இந்தியாவின் தேஜஸ் விமானங்கள் மிகவும் திறன் வாய்ந்தவைு. இப்பயிற்சி மூலம் நாடுகளின் நட்பு வலுவடைந்துள்ளது' என்றனர்.
ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமான கருவிகளின் கண்காட்சியை பொது மக்கள், வரும் 15ம் தேதி காலை, 10 முதல் 4 மணி வரை ஆதார் கார்டு மற்றும் அடையாள அட்டை ஒன்றுடன், சூலுார் விமானப்படை தளத்திற்கு சென்று பார்வையிடலாம்.