டாஸ்மாக் கூடுதல் செலவினத்துக்கு தீர்வு தேவை! கூட்டுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
டாஸ்மாக் கூடுதல் செலவினத்துக்கு தீர்வு தேவை! கூட்டுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
ADDED : மே 24, 2026 02:50 PM
பொள்ளாச்சி: கோவை தெற்கு மாவட்ட, அனைத்து டாஸ்மாக் சங்கங்களின் கூட்டுக்குழு கலந்தாய்வு கூட்டம், பொள்ளாச்சியில் நடந்தது.
கூட்டத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ்க்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். கடந்த, 23 ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் பணியாற்றுகிறோம். விடுமுறை, பண்டிகை கால விடுமுறை பணி விதிகள் ஏதுமின்றி பணியாற்றி வருகிறோம்.
டாஸ்மாக் கடைகளுக்கான கூடுதல் வாடகை, கூடுதல் மின்கட்டணம், காலி அட்டை பெட்டிகளுக்கான இழப்பீட்டு தொகை, மதுபான பெட்டிகளை இறக்கி வைப்பதற்கான கூலி, உடைந்த பாட்டில்களால் ஏற்படும் இழப்பீட்டு தொகை, விற்பனைத்தொகை வங்கியில் செலுத்த ஏற்படும் போக்குவரத்து செலவு; அலுவலகம் சென்று வருவதற்கான போக்குவரத்து செலவு ஏற்படுகிறது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு சில்லரை கொடுப்பதற்காக, 10 ரூபாய், 20 ரூபாய் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகிறது. இதற்காக கமிஷன் கொடுத்து தான் சில்லரை வாங்க வேண்டியுள்ளது.
அன்றாடம் ஏற்படும் கூடுதல் செலவினங்களை டாஸ்மாக் தொழிலாளர்கள், அனைத்து இழப்பீடுகளையும் ஏற்கும் நிலை தொடர்ந்து நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.
காலி பாட்டில்களை வாங்க பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி, அதில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தாமல் தனி முகமை அமைக்க வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை, தமிழக முதல்வருக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
