/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தளி எத்தலப்பர் அரங்கம் பணி நிறைவு ;சுற்றுச்சுவர் கட்டாததால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
/
தளி எத்தலப்பர் அரங்கம் பணி நிறைவு ;சுற்றுச்சுவர் கட்டாததால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
தளி எத்தலப்பர் அரங்கம் பணி நிறைவு ;சுற்றுச்சுவர் கட்டாததால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
தளி எத்தலப்பர் அரங்கம் பணி நிறைவு ;சுற்றுச்சுவர் கட்டாததால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
ADDED : ஜூன் 05, 2024 09:04 PM

உடுமலை: உடுமலை திருமூர்த்திமலையில் கட்டப்பட்டுள்ள, எத்தலப்பர் மணி மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சுற்றுச்சுவர், வெள்ள தடுப்புச்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை அருகே தளியை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்த, பாளையக்காரர் எத்தலப்பர் வம்சாவளியினர், நாட்டின் சுதந்திரத்துக்காக, ஆங்கிலேயருக்கு எதிராக போராடி உயிர் நீத்தனர்.
மேலும், ஆங்கிலேயருக்கு எதிர்ப்பை காட்ட, துாது வந்த ஆங்கிலேய வீரனை துாக்கிலிட்டார்.
இந்த வரலாற்றை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில், மணி மண்டபம், கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, திருமூர்த்திமலையில், காண்டூர் கால்வாய் அருகே, சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பநாயக்கருக்கு மணி மண்டபம் அமைக்கவும், உடுமலை நகராட்சி வளாகத்தில், முழுஉருவச்சிலை அமைக்கவும், 2.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், திருமூர்த்திநகர் நீர்வளத்துறை ஆய்வு மாளிகை அருகே, 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கின.
பெரிய அளவில் கூட்ட அரங்கு, உணவு அரங்கு, இருப்பு அறை, மேடை அமைப்பு என பெரிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அரங்கம் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது.
மலையடிவாரத்தில், அழகாக அமைந்துள்ள கூட்ட அரங்கு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. திருமூர்த்திமலை சுற்றுலா மையமாக உள்ளதால், மது அருந்தும் ஆசாமிகளின் புகலிடமாக மாறி வருகிறது.
மேலும், வனப்பகுதி அருகே உள்ளதால், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேலும், மழைகாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மண் அரிப்பு ஏற்பட்டு, வளாகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே, பாதுகாப்பு நடவடிக்கையாக, மலையடிவார பகுதியில் வெள்ள தடுப்புச்சுவர் மற்றும் கூட்ட அரங்கு வளாகத்திற்கு, 200 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.
கட்டுமான பணியை ஆய்வு செய்ய வந்த மாவட்ட கலெக்டரும், உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து, சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற்று, சுற்றுச்சுவர் கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆனால், ஒரு ஆண்டாகியும், எத்தலப்ப நாயக்கர் அரங்கத்திற்கு, சுற்றுச்சுவர் கட்டப்படாததால், பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
எனவே, இந்த அரங்கம் அமைந்துள்ள பகுதியில், வெள்ள தடுப்புச்சுவர் மற்றும் சுற்றுச்சுவர் கட்டவும், அரங்கத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.