/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிடிபட்டார் 'ஆனைமலை மந்திரவாதி!'
/
பிடிபட்டார் 'ஆனைமலை மந்திரவாதி!'
ADDED : பிப் 27, 2025 12:48 AM

கோவை: சுந்தராபுரம் பகுதியில் வசிக்கும் பெண்களை குறிவைத்து, மாந்திரீகம் செய்வதாக கூறி பணம், நகைகளை பறித்துச் சென்ற, போலி மந்திரவாதி போலீசார் கைது செய்தனர்.
கடந்த 14ம் தேதி, சுந்தராபுரம், சாரதா மில் ரோடு பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு, தன்னை ஆனைமலை மாசாணியம்மன் கோவில் சாமியார் என கூறி வந்த, போலி மந்திரவாதி ஒருவர் மாந்திரீக பூஜை செய்வது போல், குடும்பத்தினரை ஏமாற்றி 4 கிராம் தங்க மோதிரம் மற்றும் ரூ.21 ஆயிரம் பணத்தை சுருட்டிச்சென்றார்.
சம்பவம் குறித்து, சுந்தராபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் புகார் ஏற்பு ரசீது வழங்கி விசாரிப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கடந்த, 25ம் தேதி நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம், சுந்தராபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த அந்த போலி மந்திர வாதியை, சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர் போத்தனுார் கணேசபுரம், மூராண்டம்மன் கோவில் வீதியை சேர்ந்த ரமேஷ், 27 என்பது தெரியவந்தது.
அவர் இது போன்று வீடு வீடாக சென்று, பெண்களிடம் மோசடி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதும் தெரியவந்தது. போலீசார் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.