/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்சே வரல; வால்பாறை மக்கள் அதிருப்தி! பஸ் ஸ்டாண்டில் பல மணி நேரம் காத்திருப்பு
/
பஸ்சே வரல; வால்பாறை மக்கள் அதிருப்தி! பஸ் ஸ்டாண்டில் பல மணி நேரம் காத்திருப்பு
பஸ்சே வரல; வால்பாறை மக்கள் அதிருப்தி! பஸ் ஸ்டாண்டில் பல மணி நேரம் காத்திருப்பு
பஸ்சே வரல; வால்பாறை மக்கள் அதிருப்தி! பஸ் ஸ்டாண்டில் பல மணி நேரம் காத்திருப்பு
ADDED : ஏப் 19, 2024 10:47 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு போதுமான பஸ் இயக்காததால், பஸ் ஸ்டாண்டில் பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருந்தனர்.
லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்கும் வகையில், வெளியூர்களில் பணியாற்றும் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டினர். அதில், பல்வேறு ஊர்களில் பணியாற்றும் பலரும், ஓட்டுப்போட சொந்த ஊரான வால்பாறைக்கு செல்ல ஆர்வம் காட்டினர்.
வால்பாறைக்கு செல்ல ஆர்வம் காட்டியதால், பஸ்களில் கூட்டம் அலைமோதியது. இடம் பிடிக்க போட்டா போட்டி காணப்பட்டதுடன், தள்ளு,முள்ளு சம்பவங்களும் நடந்தன. பெண்கள் பஸ்சில் ஏற முடியாமல் தவித்தனர்.
கூடுதலாக பஸ் இயக்கப்படாததால், பொதுமக்கள் கால் கடுக்க பஸ்ஸ்டாண்டில் காத்திருந்தனர். நீண்ட நேரத்துக்கு பின் வந்த பஸ்களில், போட்டி போட்டு இடம் பிடித்தனர். பயணியர் இறங்குவதற்கு முன்பே, ஜன்னல் வழியாக பேக்குகளை வீசுவது; குழந்தைகளை அனுப்பி இடம் பிடிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறைக்கு செல்ல கூடுதல் பஸ் இயக்கப்படவில்லை. விழாக்கள், தேர்தல், பண்டிகை கால விடுமுறை போன்ற நேரங்களில், இதே நிலை தான் நீடிக்கிறது.
தற்போது, தேர்தலில், 100 சதவீதம் ஓட்டு அளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஓட்டுப்போட வால்பாறை செல்ல போதிய பஸ் இல்லை. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தும், பஸ்களில் இடம் கிடைப்பதில்லை. வரும் பஸ்களிலும் முண்டியத்து ஏறுவதால், பெண்கள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.
பஸ் இல்லாததால், சரியான நேரத்துக்கு சென்று ஓட்டுப்போட முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு வழக்கமாக இயக்குவதை விட கூடுதல் பஸ் இயக்கப்படுகிறது. 15 நிமிடங்களுக்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்பட்டது. கூட்ட நெரிசலுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது,' என்றனர்.

