/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்கள் தனித்திறமையை வளர்க்க நிதி கல்வி வளர்ச்சிக்கு தாராளம் காட்டும் மாநகராட்சி
/
பள்ளி மாணவர்கள் தனித்திறமையை வளர்க்க நிதி கல்வி வளர்ச்சிக்கு தாராளம் காட்டும் மாநகராட்சி
பள்ளி மாணவர்கள் தனித்திறமையை வளர்க்க நிதி கல்வி வளர்ச்சிக்கு தாராளம் காட்டும் மாநகராட்சி
பள்ளி மாணவர்கள் தனித்திறமையை வளர்க்க நிதி கல்வி வளர்ச்சிக்கு தாராளம் காட்டும் மாநகராட்சி
ADDED : ஜூலை 30, 2024 10:50 PM
கோவை:கோவை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் தனித்திறமையை மேம்படுத்த, சிறப்பு பயிற்சிகள் அளிப்பதற்கு, 80.96 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி சார்பில், 84 பள்ளிகள் நடத்தப்பட்டு வந்தன. பின், மாநகராட்சி எல்லைக்குள் உள்ள, 64 அரசு பள்ளிகளும் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இவ்வகையில், 148 பள்ளிகள், மாநகராட்சி கல்வி பிரிவால் நிர்வகிக்கப்படுகிறது.
பள்ளி மாணவ - மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக, ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. 2023-24 நிதியாண்டில், பர்னிச்சர் வாங்குவதற்காக, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மொத்தம், 3,998 எண்ணிக்கையில் மேஜையுடன் கூடிய நாற்காலிகள் தேவையென பட்டிலிடப்பட்டது. இதற்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு சிறு தொழில் கழகத்திடம் விலைப்புள்ளி கோரப்பட்டது.
மதிப்பீடு அதிகமானதால், விலை குறைப்பு செய்து, முதல்கட்டமாக, 2,357 எண்ணிக்கையில் மேஜையுடன் கூடிய நாற்காலிகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, இரண்டு கோடியே 49 லட்சத்து, 46 ஆயிரத்து, 744 ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெறுவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 17 மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் 26 மாணவர்கள் என மொத்தம், 43 மாணவர்கள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, நான்கு லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாணவர்களை ஒவ்வொரு பாடத்திலும் நுாறு சதவீத தேர்சி பெற வைக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையாக, 8,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, பத்தாம் வகுப்பு தேர்வில், 117 ஆசிரியர்கள், பிளஸ் 2 தேர்வில், 120 ஆசிரியர்கள் என, 237 ஆசிரியர்கள், நுாறு சதவீத தேர்ச்சிக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்திருக்கின்றனர். இவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க, 18 லட்சத்து, 96 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களை கல்வி சுற்றுலாவாக, சென்னை ஐ.ஐ.டி., பெங்களூரு ஐ.ஐ.எம்., டில்லி பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் செல்ல, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையிலும், கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் உளவியல் ஆலோசகர் மூலமாக ஆலோசனை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மாணவ - மாணவியரின் தனித்திறமையை மேம்படுத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஸ்போக்கன் இங்கிலீஷ், யோகா, சிலம்பம், களரி, அடிமுறை, கராத்தே, ஜூடோ, வாய்ப்பாட்டு, வயலின், விசைப்பலகை, பரதநாட்டியம், நடனம், டிரம்ஸ் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்காக மட்டும், 80 லட்சத்து, 96 ஆயிரம் ரூபாய் கல்வி நிதியில் இருந்து மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.
மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி கூறுகையில், ''பாடங்களில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் தேர்ச்சி பெற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளேன். ஆசிரியர்களை கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். பள்ளிகளுக்கு கூடுதல் கழிப்பறை கட்டும்போது, நாப்கின் வெண்டிங் மெஷின் மற்றும் இன்சினரேட்டர் வைக்க குறைந்த பட்சம் எட்டுக்கு எட்டு சைஸ் இடம் ஒதுக்க வேண்டும் என கோரியுள்ளோம்,'' என்றார்.