/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹாக்கி மைதானத்துக்கு ரூ.10 கோடி தேவை நிர்வாக அனுமதிக்கு காத்திருக்கிறது மாநகராட்சி
/
ஹாக்கி மைதானத்துக்கு ரூ.10 கோடி தேவை நிர்வாக அனுமதிக்கு காத்திருக்கிறது மாநகராட்சி
ஹாக்கி மைதானத்துக்கு ரூ.10 கோடி தேவை நிர்வாக அனுமதிக்கு காத்திருக்கிறது மாநகராட்சி
ஹாக்கி மைதானத்துக்கு ரூ.10 கோடி தேவை நிர்வாக அனுமதிக்கு காத்திருக்கிறது மாநகராட்சி
ADDED : செப் 07, 2024 02:30 AM

கோவை, செப். 7-
கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணியை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, 10 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து தமிழக அரசின் நிர்வாக அனுமதி கேட்டு, மாநகராட்சி அனுப்பியுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், சர்வதேச ஹாக்கி மைதானம் கட்டும் பணி துவக்கப்பட்டது; முதல்கட்டமாக ரூ.1.5 கோடி செலவழித்து பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. அதன்பின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ரூ.19.5 கோடி ஒதுக்கக்கோரி, திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதை பரிசீலித்த 'டுபிட்கோ', கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஹாக்கி விளையாடுவோர் எத்தனை பேர்; சர்வதேச போட்டி நடத்தினால் கேலரியில் எத்தனை பேர் அமர முடியும்; சர்வதேச வீரர்கள் வந்து செல்ல வசதி; தங்கும் வசதி, வாகனங்கள் நிறுத்த இட வசதி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு, நிதி ஒதுக்க மறுத்து விட்டது. அதனால், அத்திட்டம் கிடப்பில் கிடந்தது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டத்துக்கு உயிரூட்டப்பட்டது. பழைய கோப்புகள் துாசி தட்டப்பட்டு, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. இத்துறை சார்பில் ஒண்டிப்புதுாரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டு இருப்பதால், ஹாக்கி மைதானம் அமைக்கும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிக்கு, 10 கோடி ரூபாய் ஒதுக்கக்கோரி, தமிழக அரசின் நிர்வாக அனுமதி பெற, மாநகராட்சி நிர்வாகம் கருத்துரு அனுப்பி விட்டு, காத்திருக்கிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியதும் டெண்டர் கோரப்படும். சர்வதேச தரத்துக்கு 'டர்ப்' அமைக்கப்படும்.
விளையாட்டு வீரர்கள் ஓய்வெடுக்க மற்றும் உடை மாற்றுவதற்கு அறைகள் உருவாக்கப்படும். பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க, கேலரி அமைக்கப்படும். கூடுதல் வசதிகள் தேவைப்பட்டால், பேஸ்-2ல் செய்யப்படும்' என்றனர்.