/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'என்னை நீக்க மாவட்ட தலைவருக்கு அதிகாரமில்லை'
/
'என்னை நீக்க மாவட்ட தலைவருக்கு அதிகாரமில்லை'
ADDED : செப் 16, 2024 06:05 AM

கோவை: ''மத்திய நிதிஅமைச்சரிடம் ஓட்டல் நிர்வாகி மன்னிப்பு கோரும் வீடியோ விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மண்டல் தலைவர் 'தன்னை நீக்க மாவட்ட தலைவருக்கு அதிகாரமில்லை' என்று கூறியுள்ளார்,''
கோவையில் ஜி.எஸ்.டி. தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை வெளியிட்டதற்காக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ஓட்டல் உரிமையாளரிடம் எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கேட்டார்.
நிதி அமைச்சரிடம் ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ விவகாரத்தில் தவறான கருத்து பரப்பியதாக கூறி பா.ஜ.,சிங்காநல்லூர் மண்டல் தலைவர் சதீஷை கட்சியில் இருந்து மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் நீக்கினார்.
இதுகுறித்து சதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆக.,31ம் தேதியே எனது பதவி காலம் முடிந்துவிட்டது. முடிந்த பதவியை தான் கோவை மாவட்ட தலைவர் ரத்து செய்து நீக்கியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து என்னை நீக்க மாவட்ட தலைவருக்கு அதிகாரம் இல்லை. இந்த சந்திப்பு நடந்த போது அங்கிருந்தவர்கள் நான்கு பேர் மட்டுமே. அந்த வீடியோவை எனக்கு அனுப்பிய பின்பே நான் பிறருக்கு அனுப்பினேன்.
அதன் பின் அது சமூக வலைதளங்களில் வந்துவிட்டது. இந்த வீடியோவை எடுத்தது யார் என்பது எனக்கு தெரியும். கட்சி நிர்வாகிகளுக்கும் தெரியும்.
இச்சூழலில் எனக்கு வந்த வீடியோவை ' பார்வேட்' செய்தது தவறு என்றால், வீடியோ எடுத்து வெளியிட்ட நபர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில தலைவர் அண்ணாமலை நாடு திரும்பியதும் என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிப்பேன். அவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன். மீண்டும் கட்சி பணியை தொடருவேன். இவ்வாறு அவர் கூறினார்.