/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்த்திருவிழாவும்... சீர் வரிசையும்!
/
தேர்த்திருவிழாவும்... சீர் வரிசையும்!
ADDED : மார் 04, 2025 10:20 PM

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா என்றாலே ஒவ்வொரு வீட்டிலும், குடும்ப விழா போன்று கொண்டாட துவங்கி விடுவர்.பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு சீர் கொடுப்பது போன்று, தேர்த்திருவிழாவின் போது அம்மனுக்கு, 12 வகையான சீர் கொண்டு செல்வது இன்றும் பாரம்பரியம் மாறாமல் தொடர்கிறது.
திருக்கல்யாணத்தின் போது, அருட்செல்வர் மகாலிங்கத்தின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், கோவில் நிர்வாகத்தினர், மாங்கல்ய சீர் கொடுப்பது வழக்கமாக உள்ளது.
இதை தொடர்ந்து, நகை கடைக்காரர்கள் சேர்ந்து, சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, ஆபரணங்கள், சூலாயுதம், மாலை போன்றவை கொண்டு வந்து வழங்கி அம்மனை வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் நகை கடைக்காரர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து இந்த சீர் வரிசை வழங்கி அம்மனை வழிபடுகின்றனர்.
மதியத்துக்கு மேலாக, தையல் கலைஞர்கள் சீர் வரிசை கொண்டு வந்து வழங்குவர். இதற்காக ஆண்டுதோறும் அம்மனுக்காக உண்டியலில் பணம் சேர்த்து வைத்து, அதை கொண்டு தையல் கலைஞர்கள் சீர் வரிசை கொண்டு சென்று, அம்மனை வழிபாடு செய்கின்றனர்.
தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் திருஞானசம்பந்தம் கூறுகையில், ''தேரோட்ட நாளில், முதல் பூஜை செய்வதற்கு கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தனர். அம்மனுக்கு, 68 வகையான சீர் தட்டு கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம், பொள்ளாச்சி மாரியம்மன் தேர் பூஜை தையல் கலைஞர்கள் விழாக்குழு சார்பில், 25வது ஆண்டாக இந்த சீர் வரிசை வழங்கப்படுகிறது,'' என்றார்.
சின்னாம்பாளையத்தில் இருந்து பூசணிக்காய் சீர் கொண்டு வரப்படுகிறது. பூசணிக்காய் சீர் வந்த பின்னரே, தேரோட்டம் துவங்கப்படும். இந்த நிகழ்வும் பாரம்பரியமாக கடைப்பிடித்து இளைய தலைமுறையும் செய்து வருகின்றனர்.
இதுபோன்று, 12 வகையான சீர்கள் வழங்கப்படுவதாகவும்; தேரோட்டத்தின் மூன்று நாட்களும் தனியாக சீர் செய்வதும் வழக்கமாக உள்ளது. இது தவிர தேர் அலங்காரத்துக்கு தனியாக சீர் கொடுப்பவர்களும் உள்ளனர்.
தேர் திருவிழா என சாதாரணமாக பார்க்காமல், அதற்குள் அடங்கியுள்ள விஷயங்களை உற்று நோக்கினால், பல ஆச்சரியங்களும், பாரம்பரிய நடைமுறைகளையும் உணர முடியும். முன்னோர்களை தொடர்ந்து, பாரம்பரிய முறையை பின்பற்றும் இளைய தலைமுறையால், இன்னும் நமது கலாசாரம் மாறவில்லை என்பதை தேர்த்திருவிழா உணர்த்துகிறது.