/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளித்தேரில் பவனி வரும் அம்மன்
/
வெள்ளித்தேரில் பவனி வரும் அம்மன்
ADDED : மார் 04, 2025 10:15 PM

மாரியம்மன் கோவிலில், மரத்தேரில் அருள்பாலிக்கும் அம்மனை காண பக்தர்கள் கூட்டம் அதிகளவு வந்தது. இதை கண்ட மறைந்த அருட்செல்வர் மகாலிங்கம், அன்னையை வெள்ளித்தேரில் அமர்வித்து அதன் அழகு கோலத்தை மக்கள் கண்டு ரசிக்க ஆர்வம் காட்டினார்.
சிவானந்த மவுன சுவாமிகள் உடைய திருவருள் துணையோடு, மூன்று லட்சம் ரூபாய் செலவில் கலை அழகோடு வெள்ளித்தேர் வடிவமைக்கப்பட்டது. கடந்த, 1966ம் ஆண்டு டிச., 25ம் தேதி அருட்செல்வர், முதன் முதலாக மாரியம்மனின் வெள்ளித்தேர் வீதியுலாவை துவக்கி வைத்தார்.
அன்று முதல் மாசி மாதம் தேர்திருவிழாவின் போது, மூன்று நாட்கள் அம்மனின் திருத்தேர் வீதி உலா நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. மாசி மாதம் முதல் செவ்வாய் கிழமை, பறை முழக்கி தமுக்கடித்து கோவிலின் முன்புறம் முறைப்படி திருவிழா அறிவிக்கப்படும். அன்னை விழாக்கோலம் கொள்வதை ஊருக்கு பறை முழக்கி சாற்றுவதால் நோன்பு சாட்டுதல் என அழைக்கப்படுகிறது.
நோன்பு சாட்டியதில் இருந்து எட்டாவது நாள் கம்பம் நடுதல் நிகழ்ச்சி, ராஜகோபுரம் வாயிலின் முன்புள்ள மேடையில் நடப்படும். இதை கம்பம் நாட்டுதல் என அழைக்கின்றனர்.
ஆண்டுதோறும் கரியகாளியம்மன் கோவிலில், இரவு சிறப்பு அபிேஷகம் நடைபெறும். அதன் பின்னர், அங்கு இருந்து, கம்பம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தெப்பக்குளம் விநாயகர் கோவிலில் வைத்து அபிேஷகம் செய்து, மஞ்சள், குங்குமம், பூக்களால் அலங்கரித்து பூஜைகள் நடைபெறும்.
அங்கிருந்து, ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, கம்பம் நடப்படுகிறது. அப்போது, பக்தர்கள், அம்மா... தாயே, மாரியாத்தா தாயே என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசிக்கின்றனர்.
கம்பம் நடுவதற்கு முன்பாக, கோவில் முன்பாக பெண்கள் கும்மியாட்டம் நடக்கும். இதை தொடர்ந்து பெண்கள், சிறுவர், சிறுமியர் குடங்களில் மஞ்சள் நீர் கொண்டு வந்து, கம்பத்துக்கு ஊற்றியும், வேப்பிலை கொத்துக்களை வைத்தும், உப்பு கொட்டியும் வழிபடுவது ஐதீகமாக கடைபிடிக்கப்படுகிறது.
கோவில் திருவிழா துவங்கியது முதல், சிறுவர், சிறுமியர் திரண்டு மகிழ்ச்சியாக கொண்டாடும் இடமாக கோவில் வளாகம் மாறிவிடும்.