/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களை காக்க பவனி வரும் அம்மன்
/
மக்களை காக்க பவனி வரும் அம்மன்
ADDED : மார் 04, 2025 10:16 PM

மாரியம்மன் கோவில் திருவிழா, 15 நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, மூன்று நாட்கள் தேரோட்டத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தேரோட்டத்தின் காலையில், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இதை காண திரளும் பக்தர்கள், மஞ்சள் சரடு வாங்க ஆர்வம் காட்டுவர்.
தொடர்ந்து, 12 அடி உயரம் உள்ள மரத்தேரில் விநாயகரும், 21 அடி உயரம் உள்ள வெள்ளித்தேரில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
மின்விளக்குகளால் ஜொலிக்கும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் மாரியம்மன், ஊர்வலமாக வருவார். அம்மன் வருவதற்கு முன்பே, மரத்தேரில் விநாயகப் பெருமான் செல்வது வழக்கம்.
முழுமுதற்கடவுளான விநாயகப்பெருமான், தனது தாய்க்கு வழி காட்டியாக சென்று, எவ்வித இடையூறும் இல்லாமல் தாய் வருவதற்கான அவர் பாதை காட்டுவதாக கருதப்படுகிறது.
அம்மனின் தேர் வடம் பிடிக்கும் போது, விநாயகப்பெருமான் தேரும் வடம் பிடிக்கப்படும். மக்கள் வெள்ளத்தில் தவழ்ந்து செல்லும் விநாயகரின் தேரை தொடர்ந்து, வெள்ளித்தேரில் அம்மன் பவனி வருவார். தேரின் முன், கலைஞர்கள் நாதஸ்வரம் இசைத்தபடியே செல்வர்.
தெருவெங்கும் கூடி நிற்கும் பக்தர்களுக்கு அருள் மழையை பொழிந்தபடி வலம் வரும் தாயை காண கண்கோடி வேண்டும். அம்மன் தேர் வெளியே வரும் போது, பக்தர்கள் வாழைப்பழங்களை சூறைவிட்டும், தாயே, எங்களை காப்பாய் என மனமுருகி வேண்டுவர்.
பக்தர்கள் படை சூழ செல்லும் அம்மனின் தேர், முதல் நாளான மேல் திசையில் வெங்கட்ரமணன் வீதியில் நிலை நிறுத்தப்படும். கருவறையில் இருக்கும் அம்மன், மக்களோடு மக்களாக வீதி உலா வரும் போது, பக்தர்கள் நேரில் குறைகளை கூறி, விமோசனம் தேடும் விதமாக தேர்த்திருவிழா கருதப்படுகிறது.
பின்னர், அங்கு இருந்து இரண்டாம் நாள் இரவு கிளம்பும் தேர், சத்திரம் வீதியில் நிலை நிறுத்தப்படும்.
அம்மன் வருவதற்கு முன், அங்குள்ள பூ வியாபாரிகள், பொதுமக்கள் இணைந்து பூக்களால் கோலங்களை வரைந்த இடத்தில் தேர் நிலை நிறுத்தப்படும்.
தேர் நிறுத்தும் போது, கைகளை தட்டியும், மாரியம்மா, எங்களை காத்திடும்மா என கோஷங்களை எழுப்பியும் பக்தர்கள் பரசவம் அடைந்து தரிசனம் செய்வர்.
மூன்றாவது நாள் இரவு, அம்மன் கோவிலுக்கு வந்தடைந்து திருத்தேர் நிலை நிறுத்தப்படும். இத்திருவிழாவை காண பக்தர்கள், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வந்து செல்வர். இந்த மூன்று நாட்களும் பொள்ளாச்சி நகரமே திருவிழாக்கோலம் பூண்டு நிற்கும்.
உப்பு, மிளகு வழிபாடு
தேர்திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும் போது, அம்மன் தேர் சக்கரத்தில், உப்பு, மிளகு கொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாக உள்ளது.கல் உப்பு நேர்மை ஆற்றல் அளிக்க கூடியதால், பக்தர்கள் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, நோய் நொடிகள் இல்லாமல் வாழ அருள வேண்டும் என, மனமுருகி வேண்டி தேர் சக்கரத்தில் உப்பு, மிளகு கொட்டி வழிபடுகின்றனர்.