/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
களைகட்டியது 'ஹிலாரிகாஸ்' விழா!
/
களைகட்டியது 'ஹிலாரிகாஸ்' விழா!
ADDED : பிப் 15, 2025 07:31 AM

கோவை; இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த 'ஹிலாரிகாஸ்' விழாவில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் களை கட்டின.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், கல்லுாரி நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஷ்பிரபு, முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
பாரம்பரிய நடனத்துடன் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவியர், நடனம், பேஷன் ஷோ என, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
நேற்று, காதலர் தினமாதலால், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளில், காதல் பாடல்களே அதிகம் இடம் பிடித்தன. சின்னத்திரை பிரபலங்கள் சவுந்தர்யா, விஷ்ணு, திரைப்பட நடிகர்களான ஆரவ், ரெஜினா, மீனாட்சி சவுத்ரி, மடோனா, சஞ்சனா ஆகியோர் பங்கேற்று, நடனத்துடன் பாட்டு பாடி அசத்தினர்.
'மனசிலாயோ' புகழ் பாடகி தீப்தி, அரங்கத்தில் பாடியதும், உற்சாகமான கரகோஷத்தில், அரங்கம் அதிர்ந்தது. மாலையில் நடந்த நிகழ்ச்சியில், 'லுாசிபர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சி நடந்தது.
இப்படத்தில் நடித்துள்ள மோகன்லால் மற்றும் இயக்குனரும், நடிகருமான பிரித்விராஜ் பங்கேற்றது, ரசிகர்களின் கொண்டாட்டத்தை அதிகப்படுத்தியது.
நிகழ்ச்சிகளை, தொலைக்காட்சி பிரபலங்கள் குரேஷி, தியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். காலை 10:00 மணிக்கு துவங்கிய விழா, மாலை 7:00 மணி வரை நடந்தது.