/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகரம், கிராமத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்களின் அனல் பிரசாரம் ஓய்ந்தது!
/
நகரம், கிராமத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்களின் அனல் பிரசாரம் ஓய்ந்தது!
நகரம், கிராமத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்களின் அனல் பிரசாரம் ஓய்ந்தது!
நகரம், கிராமத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்களின் அனல் பிரசாரம் ஓய்ந்தது!
ADDED : ஏப் 18, 2024 04:04 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தொகுதியில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், அனல் பறக்கும் பிரசாரம் செய்து ஓட்டுக்களை வேட்டையாடினர். நேற்று மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
பொள்ளாச்சி லோக்சபா தேர்தல், எம்முறையும் இல்லாத அளவுக்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதலே பரபரப்பு ஏற்பட்டது. தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - பகுஜன் சமாஜ் கட்சி - நாம் தமிழர் - புதிய தலைமுறை மக்கள் கட்சி, ஒன்பது சுயே., உள்ளிட்ட, 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க.,
பொள்ளாச்சி தொகுதியில் உள்ள ஆறு சட்டசபையிலும் உள்ள அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுடன் வேட்பாளர் கார்த்திகேயன் தீவிர பிரசாரம் செய்தார். கிராமங்கள், நகர்புறங்களில் பிரசாரம் செய்த அவர், தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காப்பேன்; கொப்பரைக்கு விலை, ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகம், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என்றார்.
நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். தென்னை நார் தொழில் மீட்டெடுக்க பாடுபடுவேன் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து மக்களிடம் ஓட்டு வேட்டை நடத்தினார்.
கிராமங்கள், நகரங்களில், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரம் செய்தனர். கட்சியினரும், தனியாக மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தனர்.
தி.மு.க.,
பொள்ளாச்சி தொகுதியில், தி.மு.க.,வில் அமைச்சர் சக்கரபாணி, தி.மு.க., தலைமை நிலைய செயலாளர் பூச்சிமுருகன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அதில், பூச்சி முருகன், செயல்படாத நிர்வாகிகளை கடிந்து கொண்டு வேலைகளை செய்ய கூட்டங்களை நடத்தினார்.
வேட்பாளர் ஈஸ்வரசாமி, கட்சி நிர்வாகிளுடன் சேர்ந்து கிராமங்கள், நகரங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கடந்த மூன்று ஆண்டுகாலமாக தி.மு.க., செய்த சாதனைகள் மக்களிடையே குறிப்பிட்டார்.
ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்படும், தென்னை நார் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க பயிற்சி மையம் அமைக்கப்படும்.
பாலக்காடு கோட்டத்தில் உள்ள, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகள், சேலம் அல்லது மதுரை ரயில்வே கோட்டத்துடன் இணைக்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டு சேகரித்தார்.
பா.ஜ.,
பொள்ளாச்சி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன், இரண்டு திராவிட கட்சிகளுக்கு போட்டியாக கட்சியினருடன் இணைந்து தீவிர பிரசாரம் செய்தார். அவர், 'உங்க எம்.பி., நிக்க வச்சு கேளுங்க; என்ன வேணும் சொல்லுங்க' என கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி விவசாயிகள், தென்னை நார் உற்பத்தியாளர்கள், கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
மேலும், தென்னை விவசாயிகளின் பிரச்னைகளை கூறி அதற்கு நிச்சயம் தீர்வு காண்பேன்; ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். பொள்ளாச்சியில் பாஸ்போர்ட் அலுவலகம், தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம், கிருஷ்ணா குளம் சுத்திகரிக்கப்பட்டு சுற்றுலா மேம்படுத்தப்படும்.
பொள்ளாச்சியில் கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டு வரப்படும். ஆழியாறு ஆற்றில் தடுப்பு அணைகள் கட்டப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி ஓட்டு சேகரித்தார். கட்சி நிர்வாகிகளும், வீடு, வீடாக சென்று பா.ஜ., அரசின், 10 ஆண்டு கால சாதனைகளை கூறி ஓட்டு சேகரித்தனர்.
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுரேஷ்குமார், கிராமங்கள், வீதிகளில் கட்சியினருடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். வாய்ப்பு கொடுத்தால் என்ன திட்டங்களை செயல்படுத்துவோம் எனக்கூறி ஓட்டு சேகரித்தார். மேலும், சமூக வலைதளங்கள் வாயிலாக, என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை வெளியிட்டு பிரசாரம் செய்தார்.
இறுதி கட்டம்
அனல் பறக்கும் வெயிலில், வேட்பாளர்களின் அனல் பிரசாரம் நேற்று ஓய்ந்தது. அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ.,வினர் கடைசி நாளான நேற்று வாகன பிரசாரம் மேற்கொண்டனர்.
அ.தி.மு.க.,வினர், பஸ் ஸ்டாண்ட் அருகில் பிரசாரத்தை நிறைவு செய்தனர். எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ராதாகிருஷ்ணன், தாமோதரன், அமுல் கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
தி.மு.க.,வினர் தேர்நிலையம், பா.ஜ.,வினர் மகாலிங்கபுரம் ஐந்து ரோடு சந்திப்பு பகுதியிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனர். கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பேசினர்.
ஓட்டாக மாறுமா?
வேட்பாளர்கள், தங்களை வெற்றி பெற செய்தால், தொகுதிக்கான திட்டங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசியுள்ளனர். அனைவரது பிரசாரத்தையும் கூர்ந்து கவனிக்கும் மக்கள், மவுன புரட்சியே நடத்துகின்றனர்.
இந்த முறை இந்த கட்சிக்கு சாதகம், அந்த கட்சிக்கு சாதகம் என்ற மனநிலை தென்படாமல், குழப்பமான மனநிலையில் மக்கள் உள்ளனர். நாளை, 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. மும்முனை போட்டி நிலவுவதால், மக்களின் மனதை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்து பார்ப்போம்!

