/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நமது நாட்டின் விடுதலை வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கணும்!'
/
'நமது நாட்டின் விடுதலை வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கணும்!'
'நமது நாட்டின் விடுதலை வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கணும்!'
'நமது நாட்டின் விடுதலை வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கணும்!'
ADDED : ஆக 14, 2024 09:06 PM

''சுதந்திர தினத்தன்று கொடியேற்றி, குழந்தைகளுக்கு மிட்டாய் மட்டும் கொடுத்து அனுப்பக்கூடாது. அவர்களுக்கு நாட்டின் சுதந்திர வரலாற்றை சொல்லி கொடுக்க வேண்டும்,'' என்கிறார் நாடகக்கலைஞர் மருதுார் கோட்டீஸ்வரன்.
கோவை, ராமநாதபுரம் மருதுார் பகுதியில் வசித்து வரும் 80 வயதான கோட்டீஸ்வரன், அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் இதுவரை 600 வானொலி நாடகங்கள், 300 மேடை நாடகங்களை எழுதி இயக்கி நடித்து இருக்கிறார். இதில் 300 நாடகங்கள் இந்திய சுதந்திரம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றியது.
நாடக போட்டிகளில் இவரது, 51 நாடகங்கள் முதல் பரிசை பெற்றுள்ளன. நான்கு நாடக நுால்களை எழுதி இருக்கிறார்.
இதில் 'கொடிக்காத்த குமரன்' நுாலுக்கு, திருப்பூர் இலக்கிய விருது கிடைத்துள்ளது. நாடகங்களுக்காக பல விருதுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ளார். இந்தியாவின் சுதந்திரப்போராட்ட வரலாறு குறித்து மிகவும் உணர்வுபூர்வமாக பேசினார்.
அவர் கூறியதாவது:
நான் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பிறந்தவன். பிரிட்டிஷ் ஆட்சியில் அடிமையாக வாழ்ந்தவர்களுக்குதான் அதன் வலியும், கஷ்டமும் தெரியும். சுதந்திரம் பெற நம் முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை, நான் சிறுவயதில் பார்த்து இருக்கிறேன்.
திருப்பூர் குமரன், வ.உ.சி., போன்றவர்கள் பட்ட துயரத்தை இன்றைக்கு புத்தகத்தில் படிப்பவர்களுக்கு தெரியாது. நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களை, நான் கடவுளை போல் பார்க்கிறேன். அவர்களை வணங்குகிறேன். நான் எழுதிய 900 நாடகங்களில், 300 நாடகங்கள் இந்திய சுதந்திரம் பற்றியதுதான். ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் வானொலியில் என் நாடகம் ஒலிபரப்பாகும்.
எனக்கு, 80 வயதாகி விட்டது. இப்போதும், திருப்பூர் குமரன் வேஷம் போட்டு நடிக்க சொன்னால் நடிப்பேன். நம் குழந்தைகள் மனதில் தேசப்பற்றை விதைக்க வேண்டும்.
சுதந்திர தினத்தன்று கொடியேற்றி, குழந்தைகளுக்கு மிட்டாய் மட்டும் கொடுத்தால் போதாது. அவர்களுக்கு நாட்டின் விடுதலை வரலாற்றை, சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு, கோட்டீஸ்வரன் கூறினார்.