/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., முன்னோடிகளுக்கு சிலை, கூட்ட அரங்கம் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
/
பி.ஏ.பி., முன்னோடிகளுக்கு சிலை, கூட்ட அரங்கம் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
பி.ஏ.பி., முன்னோடிகளுக்கு சிலை, கூட்ட அரங்கம் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
பி.ஏ.பி., முன்னோடிகளுக்கு சிலை, கூட்ட அரங்கம் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
ADDED : ஆக 12, 2024 01:48 AM

பொள்ளாச்சி:'பி.ஏ.பி., முன்னோடிகளுக்கான சிலைகள், விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் கூட்ட அரங்கப் பணிகளை, அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார்.
பி.ஏ.பி., பாசன திட்டம் உருவாக காரணமாக இருந்தவர்களை சிறப்பிக்கும் வகையிலும், மற்றும் திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி, பயிற்சி மையம் ஆகியவை அமைக்கப்படும்,' என, தமிழக அரசு அறிவித்தது.
ஆழியாறு அணையில், திட்டப்பணி நடைபெற்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கு, நினைவு மண்டபமாக மாற்றியும், திருத்திய திட்ட மதிப்பீடாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் நடக்கின்றன.
தொடர்ந்து பொள்ளாச்சி நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு, முன்னாள் மத்திய அமைச்சர், 'சி.சுப்பிரமணியம் வளாகம்' என்று பெயர் சூட்டப்படுகிறது. இவ்வளாகத்தில், விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில், இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்படுகிறது.
கட்டடத்தில், பயிற்சி அரங்கம், கண்காட்சி அரங்கம் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியம், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகாலிங்கம் மற்றும் பழனிச்சாமிசிலைகளுடன் கூடிய நினைவு மண்டபமும் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இப்பணிகள் பொள்ளாச்சி பி.ஏ.பி., தலைமைப்பொறியாளர் அலுவலகத்தில், தென்மேற்கு பகுதியில், 1.25 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் நடக்கிறது.
கீழ்தள அரங்கிற்கு, 'வி.கே.பழனிசாமி அரங்கம்' என பெயர் சூட்டப்படும்; மேல்தளத்தில் அமைக்கப்படும் அரங்கத்திற்கு 'பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அரங்கம்' என, பெயர் சூட்டப்படுகிறது.
மேலும், பி.ஏ.பி., திட்டப்பணிகள் குறித்து, பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இப்பணிகள் மொத்தம், நான்கு கோடியே, 28 லட்சத்து, 71 ஆயிரம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணியை, செய்தித்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆய்வு செய்தார். எம்.பி., ஈஸ்வரசாமி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''பி.ஏ.பி., பாசன திட்டம் செயல்படுத்துவதற்கு காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் உள்ளிட்ட நான்கு பேருக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இந்த மணி மண்டபத்தில் அமைக்கப்பட உள்ள சிலைகளுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் மரியாதை செலத்தப்படும்,' என்றார்.