/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையின் முடிவை நாடே எதிர்பார்க்குது! பதற்றமின்றி ஓட்டு எண்ணுவதற்கு அறிவுரை
/
கோவையின் முடிவை நாடே எதிர்பார்க்குது! பதற்றமின்றி ஓட்டு எண்ணுவதற்கு அறிவுரை
கோவையின் முடிவை நாடே எதிர்பார்க்குது! பதற்றமின்றி ஓட்டு எண்ணுவதற்கு அறிவுரை
கோவையின் முடிவை நாடே எதிர்பார்க்குது! பதற்றமின்றி ஓட்டு எண்ணுவதற்கு அறிவுரை
ADDED : மே 24, 2024 11:11 PM

கோவை : 'கோவை லோக்சபா தேர்தல் முடிவை, இந்தியாவே எதிர்நோக்கி காத்திருக்கிறது; அதனால், எவ்வித பதற்றத்துக்கும் ஆளாகாமல், கவனமாக ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட வேண்டும்' என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கோவை லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், ஜி.சி.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது; ஜூன், 4ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.
ஒரு டேபிளுக்கு ஒரு மைக்ரோ அப்சர்வர், ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர் என மூவர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு ஓட்டுகளை எவ்வாறு எண்ண வேண்டும் என்கிற பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பயிற்சி அளித்தார்.
அப்போது, பயிற்சியாளர்கள் கூறியதாவது:
டேபிள் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள உதவியாளர்கள், 'ஸ்ட்ராங் ரூம்' களில் இருந்து 'கன்ட்ரோல் யூனிட்' இயந்திரங்களை எடுத்து வருவர். எந்த வரிசையில் இயந்திரங்கள் எடுத்து வர வேண்டும் என்கிற பட்டியல் உதவியாளரிடம் இருக்கும்; அதே பட்டியல் மேஜையில் இருக்கும்.
சரியான இயந்திரம் தானா என்பதை சரிபார்த்து, வேட்பாளர்களின் முகவரிடம் காண்பித்த பின், 'சீல்' உடைத்து, ஓட்டுகளை எண்ண வேண்டும்.
ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான ஓட்டுகளை படிவத்தில் குறிப்பிட்டு, முகவர்களிடம் கையெழுத்து பெற்று, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கோவை லோக்சபா தேர்தல் முடிவை, இந்தியாவே எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதனால், பதற்றம் இல்லாமல் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட வேண்டும்; கவனமாக இருக்க வேண்டும்.
நாம் என்ன தவறு செய்கிறோம் என, வேட்பாளர்களின் முகவர்கள் உற்று நோக்கிக் கொண்டிருப்பார்கள். அவசரப்பட்டு இயந்திரத்தை திறந்து விடாதீர்கள்.
படிவத்தில் உள்ள எண், இயந்திரத்தில் உள்ள எண் சரியாக இருக்கிறதா என பார்த்து விட்டு, இயந்திரத்தை திறங்கள். ஆரம்பத்தில் சின்ன சின்ன தவறு ஏற்படும்; அதை பெரிதாக்காமல், தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து தீர்வு காணுங்கள்.
வேட்பாளர்களின் முகவர்களிடம் தெரிவித்து, சின்ன சின்ன பிரச்னையையும் பூதாகரமாக மாற்றி விடாதீர்கள். தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால், சின்ன சின்ன பிரச்னையும் பெரிதாக பேசப்படும்.
ஒவ்வொரு டேபிளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள உதவியாளர்களுக்கு, ஒவ்வொரு வர்ணத்தில் 'டீ சர்ட்' வழங்கப்படும். அவர் எந்த சட்டசபை தொகுதி; எந்த டேபிளில் பணியாற்றுவர் என குறிப்பிடப்பட்டு இருக்கும்.
குழப்பமின்றி, அந்தந்த சட்டசபை தொகுதியில், அவர்களுக்குரிய டேபிளில் பணியாற்றலாம். அவர்கள் வேறு தொகுதிக்குள் செல்லக் கூடது; வேறு டேபிளுக்கும் செல்லக் கூடாது.
இவ்வாறு, பயிற்சியாளர்கள் கூறினர்.

