/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆழியாறு அணையில் இருந்து நீர் திறப்பு :பழைய ஆயக்கட்டு பகுதி பயன்பெறும்
/
ஆழியாறு அணையில் இருந்து நீர் திறப்பு :பழைய ஆயக்கட்டு பகுதி பயன்பெறும்
ஆழியாறு அணையில் இருந்து நீர் திறப்பு :பழைய ஆயக்கட்டு பகுதி பயன்பெறும்
ஆழியாறு அணையில் இருந்து நீர் திறப்பு :பழைய ஆயக்கட்டு பகுதி பயன்பெறும்
ADDED : ஜூன் 11, 2024 12:15 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. அதில், பழைய ஆயக்கட்டு பாசனத்தில்,6,400 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவளங்கன், வடக்கலுார், பெரியணை மற்றும் அம்மன் கால்வாய் வழியாக நீர் வினியோகிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் இருபோக சாகுபடிக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. கடந்தாண்டு போதிய மழை இல்லாததால், சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படாமல், நிலை பயிர்களை காப்பாற்ற மட்டும் தண்ணீர் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் வழங்குவதற்கான அறிவிப்பு வரவில்லை என விவசாயிகள் கவலை அடைந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நீர்வளத்துறை அதிகாரிகள், அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அதன்படி, தண்ணீர் திறக்க உத்தரவிட்டதையடுத்து, நேற்று ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சிங்காரவேல், உதவி பொறியாளர் கோகுல் கார்த்திக், தாசில்தார் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு உட்பட்ட, 6,400 ஏக்கர் நிலங்களுக்கு முதல் போக பாசனத்துக்காக இன்று (நேற்று) முதல், அக்., 24ம் தேதி முடிய ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து, 136 நாட்களுக்கு, 10.20 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தற்போதைய நீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் வினியோகிக்கப்படும். தண்ணீரை வீணாக்காமல் பாசன விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

