/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூரில் ஒருங்கிணைந்த திடக்கழிவு வளமீட்பு பூங்கா திறப்பு இனி குப்பைகளுக்கும் கிராக்கி
/
பேரூரில் ஒருங்கிணைந்த திடக்கழிவு வளமீட்பு பூங்கா திறப்பு இனி குப்பைகளுக்கும் கிராக்கி
பேரூரில் ஒருங்கிணைந்த திடக்கழிவு வளமீட்பு பூங்கா திறப்பு இனி குப்பைகளுக்கும் கிராக்கி
பேரூரில் ஒருங்கிணைந்த திடக்கழிவு வளமீட்பு பூங்கா திறப்பு இனி குப்பைகளுக்கும் கிராக்கி
ADDED : ஆக 28, 2024 01:23 AM

தொண்டாமுத்துார்:பேரூரில், பேரூராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பை, காய்கறி கழிவுகள், வாழை மரங்களை அரைத்து, மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றும், ஒருங்கிணைந்த திடக்கழிவு வளம் மீட்பு பூங்கா திறக்கப்பட்டது.
பேரூர் பேரூராட்சி நிர்வாகம், ராக் அமைப்பு மற்றும் மிலகிரான் நிறுவனம் இணைந்து, 35.22 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கிய ஒருங்கிணைந்த திடக்கழிவு வளம் மீட்பு பூங்கா திறப்பு விழா நேற்று பேரூரில் நடந்தது. கலெக்டர் கிராந்தி குமார் துவக்கி வைத்தார். இந்த வளமீட்பு பூங்காவில், காய்கறி கழிவுகளை அரைக்கும் இயந்திரம், வாழை மரங்களை அரைக்கும் இயந்திரம், பிளாஸ்டிக் குப்பைகளை அரைக்கும் இயந்திரம், சானிட்டரி நாப்கின் எரிக்கும் இயந்திரம், குப்பைகளை சேகரிக்க, 3 பேட்டரி வாகனங்கள் உள்ளன. இதில், தெருவில் குவிந்து கிடக்கும், அனைத்து வகை பிளாஸ்டிக் குப்பைகளை அரைத்து, அதை, பிரிக்ஸ், பிளைவுட்க்கு மாற்றான பிளாஸ்டிக் பிளைவுட், பார்க்கிங் பகுதியில் பயன்படுத்தும் பேவர் பிளாக் போன்ற மதிப்புக் கூட்டு பொருட்களாக மாற்றவுள்ளனர். அதோடு, காய்கறி கழிவுகள், இளநீர் கூடு, வாழை மரங்கள் ஆகியவைகள் காய்ந்து, உரமாக மாற்ற, சாதாரணமாக, 40 நாட்களாகும். இந்த இயந்திரங்களில் அரைத்து எடுப்பதால், 4 நாட்களிலேயே உரமாக மாற்றலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டம், முதல்முறையாக இங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், கூடுதல் கலெக்டர் ஸ்வேதா சுமன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கலெக்டர் கிராந்தி குமார் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகள், பேரூராட்சிகளில், மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இதனால், திடக்கழிவு மேலாண்மை பெரும் பிரச்னையாக உள்ளது. இதற்கு, தீர்வு காண பல்வேறு நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தினோம். அதன்படி, தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன், கோவையில் தயாரிக்கப்பட்ட தொழில் நுட்பங்கள், இயந்திரங்களை பயன்படுத்தி வளமீட்பு பூங்கா அமைத்துள்ளோம். பேரூர், ஆன்மிக தளம் என்பதாலும், நொய்யல் ஆறு உள்ளதாலும், இப்பேரூராட்சியில், 3 டன் வரை குப்பை சேகரிக்கப்படுவதால், முதன்முதலாக அங்கு அமைத்துள்ளோம். இம்முயற்சி வெற்றி அடைந்தால், படிப்படியாக அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படும்,'' என்றார்.

