/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிரம்பி வழியுது வெள்ளலுார் சின்ன குட்டை
/
நிரம்பி வழியுது வெள்ளலுார் சின்ன குட்டை
ADDED : மே 16, 2024 05:43 AM

போத்தனூர் : வெள்ளலூர் சின்னகுட்டை தூர் வாரப்பட்ட பின் தற்போது நிரம்பியுள்ளது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
வெள்ளலூர் அருகே கஞ்சிகோணாம்பாளையத்திலிருந்து செட்டிபாளையம் செல்லும் வழியில், பை-பாஸ் அருகே சின்ன குட்டை உள்ளது. 2.5 ஏக்கர் பரப்பிலுள்ள இக்குட்டை தூர் வாரப்படாததால், ஒன்றேகால் அடி ஆழமே இருந்தது.
இக்குட்டையை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், புரூக்பீல்ட்ஸ் எஸ்டேட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் தூர் வார முடிவு செய்தனர். கடந்த மாதம் இப்பணி துவங்கியது.
மூன்று பொக்லைன் இயந்திர வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
ரூ.6.18 லட்சம் செலவில், 15 நாட்கள் நடந்த பணியின் முடிவில், ஒரு மீட்டருக்கு குட்டை ஆழப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் குட்டை நிரம்பியது. தற்போது அதிகப்படியான நீர் நொய்யல் ஆற்றுக்கு செல்கிறது.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில், ''பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்த சின்னகுட்டை தற்போது தூர் வாரப்பட்டுள்ளது.
இதன் மூலம், 55 லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக சேமிக்க இயலும்.
சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். நீர் நிரம்பியதால், இப்பகுதியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,'' என்றார்.