/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணாமலை சொன்ன குருவி குஞ்சு கதை கையெழுத்து போட துடிக்கறாரு 'துணை'
/
அண்ணாமலை சொன்ன குருவி குஞ்சு கதை கையெழுத்து போட துடிக்கறாரு 'துணை'
அண்ணாமலை சொன்ன குருவி குஞ்சு கதை கையெழுத்து போட துடிக்கறாரு 'துணை'
அண்ணாமலை சொன்ன குருவி குஞ்சு கதை கையெழுத்து போட துடிக்கறாரு 'துணை'
ADDED : ஜூலை 22, 2024 11:56 PM

வராண்டாவில் அமர்ந்து நாளிதழ்களை, புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.
காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''என்னக்கா, 2026 எலக் ஷனுக்கு ஆளுங்கட்சியில இப்பவே ஒருங்கிணைப்பு குழு நியமிச்சிட்டாங்க... இவ்ளோ சீக்கிரமா வேலைய ஆரம்பிச்சிட்டாங்களே... என்னவாம்...'' என, விவாதத்தை ஆரம்பித்தாள்.
''மித்து, லோக்சபா தேர்தலுக்கும் இதே மாதிரி தான், ஒரு வருஷத்துக்கு முன்னாடியே களப்பணி ஆரம்பிச்சாங்க; பூத் வாரியா கமிட்டி பலமா இருந்ததால, ஜெயிச்சிருக்காங்க. 2026 தேர்தல் களம் எப்படி வேணும்னாலும் மாறலாம்னு நினைக்கிறாங்க; அதனால... லோக்சபா எலக்சன்ல உள்குத்து வேலை செஞ்சவங்கள, களையெடுக்கப் போறாங்களாம்.
அதுக்கான வேலையை ஆரம்பிச்சிருக்காங்க. அப்புறம், ரெண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டம்னு நியமிக்கப் போறாங்களாம். அதனால, மாவட்ட பொறுப்புல இருக்கற நிர்வாகிகள் ஒவ்வொருத்தரும், 'துாக்கமில்லாம' இருக்காங்களாம்,''
துடிக்கும் 'துணை'
''கார்ப்பரேஷன் கோப்புகள்ல பச்சை இங்க்ல கையெழுத்து போடுறதுக்கு, 'துணை'யானவரு துடியாய் துடிக்கிறாராமே...''
காபியை உறிஞ்சிய சித்ரா, ''ஆமாப்பா... நானும் கேள்விப்பட்டேன். மேயர் இல்லாததால, துணை மேயர் தலைமையில மாமன்ற கூட்டம் நடத்தப் போறதா, கமிஷனர் அறிவிச்சிருக்காரு. அதனால, தீர்மானம் சம்பந்தமான எல்லா கோப்பும், அவரது டேபிளுக்கு போகும்னு நினைச்சுட்டு இருந்தாராம். உள்ளாட்சி சட்டம் தெரியாத அவரு, மேயர் மாதிரி 'ஆக்டிங்' கொடுத்து, கெத்து காட்டியிருக்காரு... அவருக்கு ஆபீசர்ஸ் தரப்புல, சட்டப்பிரிவை விளக்கிக் காட்டியிருக்காங்க,''
''இப்போ, நிர்வாகத் தரப்புல கமிஷனர் கையெழுத்திட்டு, தீர்மானப் பொருட்களை தயாரிச்சு, கவுன்சிலர்களுக்கு நகல் அனுப்பி இருக்காங்க. இருந்தாலும் புது சர்ச்சை கெளம்பியிருக்கு. இட ஒதுக்கீடு அடிப்படையில், நம்ம கார்ப்பரேஷன் பெண்களுக்கு ஒதுக்கியிருக்காங்க.
சமூக நீதி பேசுற தி.மு.க., அரசு, பெண் மேயர் அமர வேண்டிய இருக்கையில, துணை மேயராக இருக்கற ஒரு ஆம்பளைய உக்கார வச்சு, மாமன்ற கூட்டம் நடத்தப் போறதை, எதிர்க்கட்சிக்காரங்க கிண்டல் அடிக்கிறாங்க,''
கான்ட்ராக்டர்ஸ் புலம்பல்
''அதெல்லாம் இருக்கட்டும்... கார்ப்பரேஷன் கான்ட்ராக்டர்ஸ் சென்னைக்கும், திருச்சிக்கும் அலையாய் அலையுறாங்களாமே...''
''அதுவா, ஏ.டி.எம்.கே., கவர்மென்ட் நடந்தப்போ, சில நிறுவனங்களே கார்ப்பரேஷன் டெண்டர்களை எடுக்க முடியுங்கிற அளவுக்கு, இரும்புத்திரை போட்டிருந்தாங்க. அந்த நிறுவனத்தை சேர்ந்தவங்க மட்டும் கான்ட்ராக்ட் எடுப்பாங்க; சில வேலைகளை சப்-கான்ட்ராக்ட் கொடுத்தாங்க. அந்த சின்ன, சின்ன கான்ட்ராக்டர்களுக்கு இன்னும் தொகை விடுவிக்கலையாம்,''
''ஸ்டேட் கவர்மென்ட் மாறுனதும், கார்ப்பரேஷன்ல இருந்த எம்.புக்குகளை சம்பந்தப்பட்ட கம்பெனிக்காரங்க துாக்கிட்டு போயிட்டாங்களாம். இது சம்பந்தமா 'என்கொயரி' நடத்தி, எம்.புக்குகளை மீட்டு, 'அமவுன்ட்' கொடுக்கணும்னு, கான்ட்ராக்டர்ஸ் கேக்குறாங்க. இதுக்காக, சென்னைக்கும், திருச்சிக்கும் பல கான்ட்ராக்டர்ஸ் அலையாய் அலைஞ்சிட்டு இருக்காங்க. எங்க போனாலும் வேலை நடக்கறதில்லையாம்,''
''ஏன்னா... துறையை கவனிக்கிற ரெண்டெழுத்து பிரமுகருக்கும், 'மாஜி'க்கும் இருக்கற ரகசிய தொடர்புதானாம்.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஆறே மாசத்துல 'மாஜி' ஜெயிலுக்குப் போவாருன்னு, 'கொடிசியா' மைதானத்துல நடந்த, தேர்தல் பரப்புரை கூட்டத்துல சூளுரைச்சாங்க.
ஆட்சிக்கு வந்து மூனு வருஷம் ஆச்சு; எந்த ஆக்சனும் எடுக்காததால உடன்பிறப்புகள் நொந்து போயிட்டாங்க. 'மாஜி' மேல எந்த வழக்கும் இல்லாம, நீர்த்துப்போகச் செஞ்சதுக்கு, 'மீசை'க்காரருக்கு பெரும் பங்கு இருக்கறதா, உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க,''
குருவி குஞ்சு கதை
''நம்மூருக்கு அண்ணா மலை வந்திருக்காராமே...''
''அதுவா, எலக்சன் சமயத்துல தன்னார்வலர்கள் பலரும் கைகோர்த்து, கட்சியை தாண்டி, அவருக்கு தேர்தல் வேலை செஞ்சாங்க. அவுங்களுக்கு தேங்க்ஸ் சொல்றதுக்காக, ஒரு மீட்டிங் நடத்துனாங்க. பா.ஜ.,வுல சேரப் போறதா சிலர் சொன்னாங்க... அதுக்கு, அண்ணாமலை வெளிப்படையாவே பதில் சொல்லியிருக்காரு...''
''கட்சியில சேரணும்னா... பொறுமை இருக்கணும்; சகிப்புத்தன்மை இருக்கணும்; முக்கியமா... சமரசம் செஞ்சுக்கிற அளவுக்கு பக்குவம் இருக்கணும். விருப்பப்படுறவங்க சேருங்க. தனித்தன்மையா இருக்கணும்னு நினைக்கிறவங்க சுதந்திரமா செயல்படுங்க. நடுநிலைமையோட செயல்படுற உங்களைத்தான் ஜனங்க நம்புவாங்கன்னு சொல்லி, குருவி குஞ்சு கதை சொல்லி, 'அட்வைஸ்' பண்ணியிருக்காரு,''
''அதென்ன... குருவி குஞ்சு கதை...?''
''தாய் குருவி, தன்னோட குஞ்சுக்கு பறக்க எப்படிக் கத்துக் கொடுக்கும். சாப்பிட்டு சாப்பிட்டு கொளுத்துப் போய் இறக்கை வளர்ந்து பறக்காம இருந்தா, தன்னோட அலகால எப்படி பறவையை பறக்க தள்ளி விடும்னு சொல்லி, 'பறக்க கற்றுக் கொள்ளுங்கள்; கீழே விழுந்தா தாங்கிக் கொள்ள நாங்கள் இருக்கிறோம்'னு சொல்லியிருக்காரு. இப்படி, பா.ஜ.,வும் 2026 எலக்சனுக்கு களத்தை தயார் செய்ய, ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன்,''
நிற்காத இலவச பஸ்
''நம்மூர்ல லேடீஸ்க்கு, இலவச பஸ்களை சரியா ஓட்டுறதில்லைன்னு கம்ப்ளைன்ட் வந்துச்சாமே...''
''எலக்சன்ல தி.மு.க., வுக்கு கை கொடுத்ததே, லேடீஸ்க்காக செய்ற திட்டங்கள்தான். ஆனா, கார்ப்பரேஷன் லிமிட்டுல, 10வது வார்டுல இருக்கற அம்மன் கோவில் ஸ்டாப்புல லேடீஸ் இலவச பஸ் நிறுத்துறதில்லைன்னு, நார்த் ஜோன் சேர்மன்ட்ட பப்ளிக் சொல்லியிருக்காங்க. அந்த ஸ்டாப்புக்கு போயி, அவரும் கண்காணிச்சிருக்காரு,''
''காந்திபுரத்துல இருந்து வந்த, 115பி பஸ்சை நிறுத்தி, விசாரிச்சிருக்காரு. அப்போ, மரியாதை இல்லாம பேசியதோட, முடிஞ்சதை செய்யுங்கன்னு தெனாவட்டா பேசியிருக்காங்க. போக்குவரத்து கழக ஆபீசருக்கு தகவல் போயிருச்சு; உடனே, சம்பந்தப்பட்ட பஸ் டிரைவருக்கு 'மெமோ' பறந்துருக்கு; தற்காலிக கண்டக்டரா வேலைபார்த்தவரு, 'சீட்'டை கிழிச்சிட்டாங்களாம்,''
''ஆமாக்கா, இதே மாதிரி ஏகப்பட்ட டிபார்ட்மென்ட்டுல, அதிரடி ஆக்சன் நடந்துட்டு இருக்குதாம். சூலுார் ஏரியாவுல ஏகப்பட்ட டிபார்ட் மென்ட்டுல இருக்கற ஆபீசர்களை, வெவ்வேற இடங்களுக்கு துாக்கியடிச்சிட்டாங்களாம்.
மாற்றத்துக்கான பின்னணிய 'என்கொயரி' செஞ்சா, ஏகப்பட்ட தில்லுமுல்லு வேலைகள் செஞ்சதும்; வசூல் வேட்டையில இறங்குனதும் தெரியவந்ததால, பதவியை பறிச்சிட்டாங்களாம். ஒரு ஆபீசரை, 'ரிடையர்மென்ட்' ஆகுற சமயத்துல, 'சஸ்பெண்ட்' செஞ்சிருக்காங்க,''
முளைக்குது ஹோர்டிங்ஸ்
''இருந்தாலும், சூலுார் ஏரியாவுல இன்னும் சில ஆபீசர்ஸ் இருக்கத் தான் செய்றாங்க, மித்து! பஞ்சாயத்து ஏரியாவுல ஹோர்டிங்ஸ் வைக்கிறதுக்கு, கலெக்டர் எந்த பர்மிஷனும் கொடுக்கலை; அரசாணையும் இல்லை. அரசாணையை மீறி, உயரமான பில்டிங் மேல, மெகா சைசுல ஹோர்டிங்ஸ் வைக்கிறதுக்கு, சூலுார் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்துல, அனுமதி கொடுத்திருக்காங்களாம்,''
''இது சம்பந்தமா விசாரிச்சா, வைக்கக் கூடாதுன்னு கவர்மென்ட் ஆர்டர் போட்டிருந்தா, அந்த ஆர்டர் நகலை காட்டுன்னு, அந்த ஆபீசர் சொல்றாராம். ஏற்கனவே ஹோர்டிங்ஸ் எடுத்த பில்டிங்ல எல்லாம் மறுபடியும் வைக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்... திரைமறைவுல என்ன நடந்துச்சுன்னு தெரியலை. கேட்டா, கலெக்டர் ஆபீசுல பஞ்சாயத்துகளை நிர்வாகிக்கற அதிகாரிய சொல்றாங்களாம்,''
''அக்கா... அன்னுார் யூனியன்லயும், ஒரு பிரச்னை ஓடிட்டு இருக்குதாம். டெவலப்மென்ட் ஒர்க் செஞ்சதுக்கு பில் தொகை கொடுக்கறதுல, விதிமீறல் நடக்குதுன்னு கம்ப்ளைன்ட் கெளம்பியிருக்கு. பொறியியல் பிரிவு அதிகாரிங்க மேல, எந்த நடவடிக்கையும் எடுக்காம ஊரக வளர்ச்சித்துறை ஆபீசர்ஸ் மவுனமா இருக்காங்களாம்,''
கர்ப்பிணிகள் அவஸ்தை
''ஹெல்த் டிபார்ட்டுமென்ட்டுல, ஒரு விவகாரம் கேள்விப்பட்டேனே...''
''வடவள்ளியில இருக்கற நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துல நடக்குற பிரச்னை தானே. அது, கார்ப்பரேஷன் கன்ட்ரோல்ல வரும். அந்த மையத்துக்கு வர்ற கர்ப்பிணிகளை மரியாதை இல்லாம பேசுறாங்களாம். அவுங்க பரிந்துரை செய்ற சென்டருக்கு போயி, பிளட் டெஸ்ட், ஸ்கேனிங் செய்யணும்னு கட்டாயப்படுத்துறாங்களாம்; இல்லேன்னா, பர்த் சர்ட்டிபிகேட் கிடைக்காதுன்னு திமிரா சொல்றாங்களாம்; கர்ப்பிணிகள் அவஸ்தைப்படுறாங்க,''
ஆய்வுக்கு வரும் புரோக்கர்
''அதெல்லாம் இருக்கட்டும்... உங்களைத் தேடி உங்கள் ஊரில்; மக்களுடன் முதல்வர்ன்னு ஏகப்பட்ட ஸ்கீம் ஆரம்பிக்கிறாங்க; ஆனா, லஞ்சத்தை ஒழிக்க முடியலையே...''
''ஆமாக்கா... நீங்க சொல்றது உண்மைதான்! வேலாண்டிபாளையத்துல இருக்கற மணியக்காரர் ஆபீசுல புரோக்கர் ஆட்சி நடக்குது. சான்று கேட்டு யாராச்சும் விண்ணப்பிச்சா, களப்பணிக்கு புரோக்கர்தான் வர்றாராம். அப்போ, 'அம்மா'வுக்கு இவ்ளோ கொடுக்கணும்னு சொல்லி, பல லகரங்கள் கேக்குறாராம்; செமயா வசூல் வேட்டையில ஈடுபடுறாராம். அவருக்கு ஆபீசர்ஸ் ஒடந்தையா இருக்காங்களாம்,''
தண்டல்காரருக்கு தடை
''நார்த் தாலுகா ஆபீசுக்கு, தண்டல்காரர் வர்றதுக்கு தடை போட்டிருக்காங்களாமே...''
''அதுவா... காளப்பட்டியில ஜமாபந்தி நடந்தப்போ... கோட்டாட்சியரையும், தாசில்தாரையும் தண்டல்காரர் ஒருத்தரு படுகேவலமா விமர்சனம் செஞ்சாரு. அதுவும், நார்த் தாலுகா ஆபீஸ் ஊழியர்கள்கிட்டேயே பேசியிருக்காரு. பைல்ல கையெழுத்து போட கரன்சி வாங்குனா... தேவையில்லாம கேள்வி கேக்கக் கூடாதுன்னு, கண்டிஷன் போட்டிருக்காரு. அதை விசாரிச்ச ஆபீசர்ஸ், சம்பந்தப்பட்ட தண்டல்காரர் தாலுகா ஆபீஸ் பக்கமே வரக்கூடாதுன்னு, ஆர்டர் போட்டிருக்காங்களாம்,''
சாவிக்குள் மர்மம்
''பாரதியார் யுனிவர்சிட்டியில ஏகப்பட்ட மர்மம் இருக்குதுன்னு, பேராசிரியர்கள் பேசிக்கிறாங்களே... உண்மையா...''
''ஆமாக்கா... உண்மைதான்! பாரதியார் யுனிவர்சிட்டியில லஞ்ச ஒழிப்பு சம்பந்தமான கோப்புகள், மற்ற கம்ப்ளைன்ட் கோப்புகள் ஒரு 'டார்க் ரூம்'ல வச்சிருக்காங்க; அந்த ரூமுக்கான சாவி, பொறுப்பாளர் ஒருத்தர்கிட்ட இருக்கு. மற்ற பொறுப்பாளர்கள், கோப்புகளை எடுக்க சாவி கேட்டால், 'எங்கே வச்சேன்னு தெரியலை; காணாம போயிடுச்சு'ன்னு சாக்குப்போக்கு சொல்றாராம்,''
''சாவி வச்சிருக்கிற பொறுப்பாளர் மேலயும், ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் இருக்குதாம். அதனால, கோப்புகள் 'மிஸ்' ஆயிரும்னு, பேராசிரியர்கள் புலம்புறாங்க.
சாவி வச்சிருக்கிறவரு மேல, 'என்கொயரி கமிட்டி'யில கம்ப்ளைன்ட் உறுதி செஞ்ச பிறகும், ஆக் ஷன் எடுக்கறதுக்கு தயக்கம் காட்டுறாங்களாம்,'' என்றபடி சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.