/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகற்ற வேண்டும் தேங்கும் மழைநீரை... இனி 'ஓபி' அடிக்க முடியாது! உணர்ந்து விட்டது நெடுஞ்சாலைத்துறை
/
அகற்ற வேண்டும் தேங்கும் மழைநீரை... இனி 'ஓபி' அடிக்க முடியாது! உணர்ந்து விட்டது நெடுஞ்சாலைத்துறை
அகற்ற வேண்டும் தேங்கும் மழைநீரை... இனி 'ஓபி' அடிக்க முடியாது! உணர்ந்து விட்டது நெடுஞ்சாலைத்துறை
அகற்ற வேண்டும் தேங்கும் மழைநீரை... இனி 'ஓபி' அடிக்க முடியாது! உணர்ந்து விட்டது நெடுஞ்சாலைத்துறை
UPDATED : மே 27, 2024 02:19 AM
ADDED : மே 27, 2024 02:17 AM

கோவை:கோவையில் உள்ள பிரதான ரோடுகளில் தேங்கும் மழை நீரை அகற்ற, மாநகராட்சியோடு
நெடுஞ்சாலைத்துறையினர் கைகோர்த்து பணியாற்ற வேண்டுமென, மாநகராட்சி கமிஷனர்
சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
கோவை நகர் பகுதியில், 2,618.08 கி.மீ., நீளமுள்ள சாலைகள், மாநகராட்சியால் பராமரிக்கப்படுகின்றன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினரால், 219.60 கி.மீ., நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.
மிக முக்கிய சாலைகளான, அவிநாசி ரோடு மற்றும் லாலி ரோடு, போத்தனுார் ரோடு, மதுக்கரை மார்க்கெட் ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் இருக்கின்றன.
திருச்சி ரோடு, பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு ஆகியவை தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் இருக்கின்றன.
இதில், பொள்ளாச்சி ரோடு பராமரிப்பு பணி மட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) வசம் இருக்கிறது. இதேபோல், அவிநாசி ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் இருந்தாலும், உப்பிலிபாளையம் பழைய மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் இருக்கிறது.
ஆனால், கோவை நகர் பகுதியில் மழை பெய்தால், ரோட்டில் தண்ணீர் தேங்கும்போது, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் பாராமுகமாக இருக்கின்றனர்.
மாநகராட்சி அலுவலர்களே ஓடிச்சென்று, கொட்டும் மழையிலும் மெனக்கெடுக்கின்றனர். சுரங்கப்பாதைக்கு கீழ் தேங்கும் தண்ணீரை, 'பம்ப்' செய்து வெளியேற்றுவதற்கு கஷ்டப்படுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை வசமுள்ள, திருச்சி ரோட்டில் லங்கா கார்னர் அமைந்திருக்கிறது; இங்கு தேங்கும் தண்ணீரை அகற்ற, இத்துறையினர் எட்டிக் கூட பார்ப்பதில்லை. இதேபோல், அவிநாசி ரோடு மேம்பாலம் இத்துறையினர் வசம் இருக்கிறது.
போத்தனுார் ரோடு மற்றும் மதுக்கரை மார்க்கெட் ரோட்டை, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் சமீபத்தில் விரிவாக்கம் செய்து, மழை நீர் வடிகால் கட்டினர். பல இடங்களில் விடுபட்டிருப்பதால், மழை நீர் செல்ல வழியில்லை. சில நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு, போத்தனுார் ரோட்டில் ஆறு போல் மழை நீர் தேங்கியது.
இதுதொடர்பாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில், நடந்த சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கலெக்டர் கிராந்திகுமார் முன்னிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி எல்லைக்குள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளில், எங்கெங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது என்பதை விளக்கும் புகைப்படங்களை, திரையில் போட்டுக் காண்பித்து விளக்கினார்.
அப்போது, 'மழை நீர் தேங்கினால், அவற்றை அகற்றுவது மாநகராட்சி பொறுப்பு மட்டுமல்ல; அந்தந்த ரோடுகளை பராமரிக்கும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினரும், முன்வர வேண்டும்.
அத்துறையினர் கட்டியுள்ள மழை நீர் வடிகாலில், தண்ணீர் தேங்கி நிற்பதற்கான காரணங்களை கண்டறிந்து, தீர்வு காண வேண்டும். மோட்டார் இயக்கி, 'பம்ப்' செய்ய வேண்டுமெனில், அதற்கான பணிகளில், நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியோடு நெடுஞ்சாலைத்துறையினர் கைகோர்த்து பணியாற்ற வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
இனி, மாநகராட்சியோடு இணைந்து பணியாற்றுவதாக, நெடுஞ்சாலைத்துறையினர் உறுதி கூறினர்.
'மழை நீர் தேங்கினால், அவற்றை அகற்றுவது மாநகராட்சி பொறுப்பு மட்டுமல்ல; அந்தந்த ரோடுகளை பராமரிக்கும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினரும், முன்வர வேண்டும். அத்துறையினர் கட்டியுள்ள மழை நீர் வடிகாலில், தண்ணீர் தேங்கி நிற்பதற்கான காரணங்களை கண்டறிந்து, தீர்வு காண வேண்டும்.

