/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் முயற்சியால் சுத்தமானது நீரோடை
/
மக்கள் முயற்சியால் சுத்தமானது நீரோடை
ADDED : மே 01, 2024 11:00 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள, மாமாங்கம் நீரோடை பொதுமக்கள் சார்பில் சுத்தம் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள மாமாங்கம் நீரோடையில் தண்ணீர் வரத்து இருந்த போது, சிறுவர்கள், இளைஞர்கள் மீன் பிடித்து செல்வார்கள். இதனால் இங்கு எப்போதும் கூட்டமாகவே இருக்கும்.
தற்போது, கோடை காலம் என்பதால், இந்த நீரோடை முழுவதுமாக வறண்டு காணப்படுகிறது. மேலும், இந்த ரோட்டில் செல்பவர்கள் சிலர், நீரோடையில் குப்பையை கொட்டி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
கோழி இறைச்சி கழிவும் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால், நீரோடையின் ஒரு பகுதி குப்பை கொட்டும் இடமாகவே மாறியது. இந்த நீரோடை அருகே செல்லும் போது கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதை தொடர்ந்து, கிணத்துக்கடவு பொதுமக்கள் தானாக முன் வந்து, நீரோடையை பொக்லைன் இயந்திரம் வாயிலாக சுத்தம் செய்தனர். இதனால், இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை மழை பெய்யும் போது, இந்த நீரோடையில் பழைய படி நீர் வரத்து ஏற்படும் என, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

