/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊரே கொண்டாடும் மூனு நாள் திருவிழா
/
ஊரே கொண்டாடும் மூனு நாள் திருவிழா
ADDED : மார் 04, 2025 10:13 PM

பொள்ளாச்சியில் காவல் தெய்வமாக வீற்று இருக்கும் மாரியம்மன், மனமார பிரார்த்திக்கும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றி, நிலையான செல்வங்களை அள்ளித்தருகிறார்.
பாதுகாப்பு அரணாய் இருந்து, பிணிகள், பாதகம் நீக்கியும், கவசம் போல காக்கும் கருணை தெய்வமாக வீற்று இருக்கிறார்.
பொள்ளாச்சியில் மும்மாரி மழை பெய்திட அருளும் மாரித்தாயின் திருவிழா, ஒவ்வொரு வீட்டிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழா தேதி அறிவிப்புக்கு முன்பே, ஊர் தயாராகிவிடும். சொந்த பந்தங்களை அழைத்து, திருவிழாவை, அவர்கள் வீட்டு விழாவாக கொண்டாடுகின்றனர்.
வெள்ளித்தேரில் அம்மன் எழுந்தருளி வீதி உலா காண வருவதை காண பக்தர்கள் கூட்டம் அலை, அலையாக திரண்டு நிற்கும்.
திருவிழாவுக்கு வருவோர் பசியார பல அமைப்புகளும் முன்வந்து அன்னதானம் வழங்குவது வழக்கமாக உள்ளது.
மூன்று நாள் தேரோட்டத்திலும் அன்னதானம் வழங்கப்படுவது இந்த விழாவின் சிறப்புகளின் ஒன்றாக உள்ளது.
திருவிழா வழக்கம்
மாரியம்மன் கோவில் திருவிழா மாசி மாதம் நோன்பு சாட்டப்படும். நோன்பு சாட்டுவதற்கு முன்பு வரை, மாவு அரைக்கும் மில்களில், மிளகாய் போன்றவை அரைத்து தரப்படும்.
திருவிழா துவங்கிய பின், மிளகாய் உள்ளிட்டவை அரைப்பது தவிர்ப்பதும் வழக்கமாக உள்ளது.
மாரியம்மன் திருவிழா துவங்கிய பின், உஷ்ணம் தரக்கூடிய விஷயங்களை தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நடைமுறை கடைப்பிடிப்பதை காண முடிகிறது.
பூவோடு குழு
திருவிழாவில், கோவில் பூவோடு துவங்கிய பின், பக்தர்கள் பூவோடு துவங்குகிறது. இதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் பூவோடு குழு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு பகுதியில் இருந்தும், ஒவ்வொரு நாளில், ஒட்டுமொத்த மக்களும் திரண்டு பூவோடு எடுத்து, பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர்.
சமுதாய விழா
தேரோட்டம் முதல்நாளன்று அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனம், பள்ளி, கல்லுாரிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதனால், காலையில் மாவிளக்கு, பொங்கல் வழிபாடு, அதன்பின் அம்மன் திருக்கல்யாணம், அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் விநாயகப்பெருமான் எழுந்தருளள், வெள்ளித்தேரில் அம்மன் எழுந்தருளள், தேரோட்டம் என, காலை முதல் இரவு வரையிலும், அனைத்து நிகழ்வுகளிலும் குடும்பத்துடன் பங்கேற்று, அம்மனை வழிபடுவதை மக்கள் காலம்காலமாக கடைபிடிக்கின்றனர். அம்மன் திருக்கல்யாணம் முடிந்த பின், உறவினர்கள், நண்பர்களுடன் வீட்டில் விருந்துண்டு, உறவு போற்றும் விழாவாக, மாரியம்மன் விழா கொண்டாடப்படுகிறது.