/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பஸ்களில் அதிக கட்டண வசூல் மடக்கிப்பிடித்த போக்குவரத்து அதிகாரிகள்
/
அரசு பஸ்களில் அதிக கட்டண வசூல் மடக்கிப்பிடித்த போக்குவரத்து அதிகாரிகள்
அரசு பஸ்களில் அதிக கட்டண வசூல் மடக்கிப்பிடித்த போக்குவரத்து அதிகாரிகள்
அரசு பஸ்களில் அதிக கட்டண வசூல் மடக்கிப்பிடித்த போக்குவரத்து அதிகாரிகள்
ADDED : மே 28, 2024 01:06 AM
கோவை;அரசு பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்த, ஆறு அரசு பஸ்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கும் அதிகமாக பஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்து, நேற்று கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்யகுமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா ஆகியோர், உக்கடம் பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான, 50க்கும் மேற்பட்ட பஸ்களை ஆய்வு செய்தனர். அதில் அரசுக்கு சொந்தமான 6 பஸ்களில், அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கும் அதிகமாக கட்டணம் வசூலித்தது தெரியவந்தது.
பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு பயணிக்க, அரசு பஸ்களில் 25 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால் ஆத்துப்பாலம், புட்டுவிக்கி வழியாக பஸ் திருப்பி விடப்படுவதால், 28 ரூபாய் வசூலிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சில பஸ்களில், 36 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதற்காக கட்டணப்பட்டியலில் வட்டாரபோக்குவரத்து அலுவலரிடம், எந்த மாற்றமும் செய்யவில்லை.
இது குறித்து, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சத்யகுமார் கூறியதாவது:
பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு வரும் பஸ்களில், அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டே இருந்தது. திடீர் ஆய்வு செய்ய, போக்குவரத்து இணை கமிஷனர் அறிவுறுத்தியிருந்தார். நேற்று உக்கடம் பஸ் ஸ்டாண்டில், திடீர் சோதனை மேற்கொண்டோம். அதிக கட்டணம் வசூலித்த 6 அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இவ்வாறு, அவர் கூறினார்.