/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிதி ஒதுக்கியும் பணி துவங்கவில்லை
/
நிதி ஒதுக்கியும் பணி துவங்கவில்லை
ADDED : ஆக 07, 2024 11:30 PM
அன்னுார் : 'மேல்நிலைத் தொட்டி கட்ட, 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, ஆறு மாதம் ஆகியும் பணி துவங்கவில்லை,' என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குன்னத்தூர் ஊராட்சி, மேட்டுக்கடை பகுதியில், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடிநீர் வினியோகம் குறைவாக உள்ளதால், இங்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டி, வீடுகளுக்கும், நிறுவனங்களும், குடிநீர் இணைப்பு வழங்க பொதுமக்கள் இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ., தனபால், கடந்த ஜனவரி மாதம் இதற்கு, 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, திருப்பூர் கலெக்டரிடம் கடிதம் அளித்தார். இதைத்தொடர்ந்து, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், கடந்த பிப். 5ம் தேதி கோவை கலெக்டருக்கு அனுப்பிய கடிதத்தில், 'குன்னத்தூர் ஊராட்சியில், மேல்நிலைத் தொட்டி கட்ட, 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,' என தெரிவித்துள்ளார். ஆனால் ஆறு மாதமாகியும், இதுவரை பணி துவங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
இது குறித்து மேட்டுக்கடை பகுதி மக்கள் கூறுகையில்,''இங்கு குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணி உத்தரவு வழங்கவில்லை. பணி துவங்கவில்லை. நிதி ஒதுக்கியும் மக்கள் குடிநீர் பிரச்னை தீரவில்லை. ஒன்றிய அதிகாரிகள் விரைவில் பணியை துவக்கி, மேல்நிலைத் தொட்டி கட்டி, குடிநீர் வினியோகத்தை துவக்க வேண்டும், என்றனர்.