/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரதனுார் ஊராட்சியில் பிரச்னைகள் ஏராளம்!
/
வரதனுார் ஊராட்சியில் பிரச்னைகள் ஏராளம்!
ADDED : ஜூன் 13, 2024 11:21 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, வரதனூர் ஊராட்சியில் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதால், மக்கள் பாதிக்கின்றனர்.
கிணத்துக்கடவு, வரதனூர் ஊராட்சியில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி அலுவலகம், நூலகம், கிராம நிர்வாகம் அலுவலகம், ரேஷன் கடை, அரசு மற்றும் தனியார் பள்ளி, பொது கழிப்பிடம் என அனைத்தும் ஒரே பகுதியில் உள்ளது.
ஊராட்சிக்கு உட்பட்ட செங்குட்டைபாளையத்தில், தினம் தோறும் வேலைக்கு சென்று வரும் நபர்கள் சிலர், இந்த அரசு அலுவலக கட்டடங்கள் அருகே அமர்ந்து மது அருந்திவிட்டு காலி மது பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர்.
இதை, ஊராட்சி நிர்வாகத்தினர் சார்பில் அவ்வப்போது சுத்தம் செய்தாலும், அடுத்த நாள் வேறு இடத்தில் இதே வேலையை செய்கின்றனர்.
மேலும், காலி மது பாட்டிலை பள்ளியில் வீசுவது, ரேஷன் கடை அருகே எறிவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுமட்டும் இன்றி, ஊர் பொது இடங்களில் சமூக விரோதிகள் சீட்டு விளையாடுகின்றனர்.
வரதனூரில் வாரத்துக்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை, ஒன்றரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. போர்வெல்களில் தண்ணீர் அளவு குறைந்து கொண்டே வருகிறது.
போதிய அளவு குடிநீர் வசதியும் இல்லாததால், மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது, என, ஊராட்சி நிர்வாகத்தினரே புலம்புகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக ஊராட்சியில் அதிக அளவு மின்வெட்டு ஏற்படுகிறது. இடையிடையே ஐந்து நிமிடம் மட்டுமே மின் வினியோகம் இருந்தது. இப்படி நாள் முழுவதும் மின்வெட்டு இருந்ததால், தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், ஊராட்சி நிர்வாகம் மட்டும் இன்றி பொதுமக்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்களும் சிரமப்பட்டனர்.