/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டா இருக்கு; இடம் எங்கே! பயனாளிகள் வேதனை
/
பட்டா இருக்கு; இடம் எங்கே! பயனாளிகள் வேதனை
ADDED : ஆக 26, 2024 01:30 AM
உடுமலை;உடுமலை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு, பல ஆண்டுகளாகியும், இடம் ஒதுக்கீடு செய்யாததால், பயனாளிகள் வேதனையடைந்துள்ளனர்.
உடுமலை தாலுகா, பண்ணைக்கிணறு கிராமத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 10 ஏக்கர் நிலம், இலவச வீட்டு மனை பட்டா வழங்க கையகப்படுத்தப்பட்டது.
கடந்த, 2014ம் ஆண்டு, 370 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, இலவச வீட்டு மனை பட்டா, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.
போதிய போக்குவரத்து வசதி இல்லாத இடத்தில், பட்டா வழங்கப்பட்டதால், பயனாளிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். மேலும், அவர்களுக்கான இடத்தையும், இதுவரை, வருவாய்த்துறையினர் அளவீடு செய்து தரவில்லை.
எனவே, இலவச வீட்டு மனை பட்டா உத்தரவு நகல்களை மட்டும் கையில் வைத்து கொண்டு பயனாளிகள் வேதனையில் உள்ளனர். பல ஆண்டுகளாக, பண்ணைக்கிணறு இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
பயனாளிகள் கூறுகையில், 'பண்ணைக்கிணறு கிராமத்தில், இலவச வீட்டு மனை பட்டா, எவ்வித வசதிகளும் இல்லாத இடத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்டது. பட்டா வழங்கப்பட்ட இடத்துக்கு செல்ல, பாதை இல்லை. அளவீடு செய்வது, ஒதுக்குவது இழுபறியாக இருப்பதால், வீடு கட்ட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம்,' என்றனர்.
இதுகுறித்து, தமிழக அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.