/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாடப்புத்தகம் இல்லை... தேர்வு உண்டு... அரசு பள்ளி உடற்கல்வி படிப்பில் வினோதம்
/
பாடப்புத்தகம் இல்லை... தேர்வு உண்டு... அரசு பள்ளி உடற்கல்வி படிப்பில் வினோதம்
பாடப்புத்தகம் இல்லை... தேர்வு உண்டு... அரசு பள்ளி உடற்கல்வி படிப்பில் வினோதம்
பாடப்புத்தகம் இல்லை... தேர்வு உண்டு... அரசு பள்ளி உடற்கல்வி படிப்பில் வினோதம்
ADDED : ஆக 13, 2024 01:27 AM
பெ.நா.பாளையம்;அரசு உயர்நிலைப் பள்ளியில் உடல் கல்வியியல் பாடத்திட்டம் எதுவும் இல்லை. ஆனால், தேர்வு மட்டும் நடக்கிறது. இது போன்ற பல குறைபாடுகளுடன் அரசு பள்ளி உடற்கல்வியியல் துறை இயங்கி வருவதாக உடற்கல்வி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள, 72 அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், நான்கு பள்ளிகளில் மட்டுமே பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், பல துவக்க பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களே இல்லாத பரிதாபம் நீடிக்கிறது.
வாரத்தில் இரண்டு வகுப்புகள்
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளில் உடற்கல்வி தேர்வு நடக்கிறது. தேர்வு மட்டும் தான் உண்டு. அதற்கான பாடத்திட்டம் எதுவும் இல்லை. இதில், மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறுவது கட்டாயம் இல்லை என்ற நிலை நீடிக்கிறது. இதனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில் உடல் கல்வியியல் துறை வெறும் காட்சிப் பொருளாக உள்ளது. கோவை மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார், 400 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இது குறித்து, உடற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு வகுப்புக்கும், வாரத்தில் இரண்டு வகுப்புகள் வீதம் தலா, 40 நிமிடங்கள் என, உடற்கல்வி துறைக்காக ஒதுக்கப்படுகின்றன. அவை போதுமானதாக இல்லை. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியருடன் 'மார்க்கர்' என்ற ஊழியர் பணியில் இருக்க வேண்டும். அந்நபர் விளையாட்டு மைதானங்களில் குறியீடு செய்தல், விளையாட்டு உபகரணங்களை பராமரித்தல், மைதான பராமரிப்பு ஆகியவை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய ஊழியர்கள் பெரும்பாலான பள்ளிகளில் இல்லை.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செய்ய மாணவ, மாணவியரை வெளியூர் அழைத்துச் செல்ல அரசு சார்பில் தொகை வழங்கப்படுவதில்லை. வெளியூர் போட்டிகளுக்கு செல்ல தனியாரிடம் ஸ்பான்சர்ஷிப் பெற்று செல்லும் சூழ்நிலையே உள்ளது. மேலும், விளையாட்டின் போது மாணவ, மாணவியருக்கு சிறு காயம் ஏற்பட்டால், உடற்கல்வி ஆசிரியரே அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல் உள்ளது.
700 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
பல ஆண்டுகளுக்கு முன்பு, 200 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை இருந்தது. அது மாற்றப்பட்டு தற்போது, 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை உள்ளதால் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
சுமார், 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் விளையாட்டு உள்ளிட்ட உடற்கல்வி தொடர்பான பணிகளில் மட்டுமே ஈடுபடுவார். ஆனால், இன்றைய நிலைமை வேறு. ஒரு அரசு பள்ளியின் பராமரிப்பை உடற்கல்வி ஆசிரியரே மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. சுருக்கமாக கூறினால், உடற்கல்வி ஆசிரியர் எந்த பணிக்காக நியமனம் செய்யப்பட்டாரோ, அந்த பணி தவிர மற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பள்ளி நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்துகின்றனர்.
பல பள்ளிகளில் இன்னும் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட வகுப்பு நேரத்தை, தங்களுக்கு வழங்க வேண்டும் என பிற பாட ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி பெற்றுக் கொள்கின்றனர்.
விளையாட்டு விஷம் அல்ல. அது ஒவ்வொரு மாணவ, மாணவியரின் உடல் நலத்தையும், மனநலத்தையும் ஆரோக்கியமாக வளர்க்கும் என்பதை பள்ளி நிர்வாகத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசு விளையாட்டுக்கு என அமைச்சரை நியமனம் செய்து, அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிலையில், மாறுபட்ட போக்குடன் இருக்கும் ஒரு சில அரசு பள்ளி நிர்வாகத்தினருக்கு தகுந்த அறிவுரை வழங்கி, பள்ளிகளில் படிக்கும், விளையாட்டில் ஆர்வம் உடைய மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதனால் எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களை நம் நாடு பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கூறினர்.