/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடிக்கு தண்ணீர் இணைப்பில்லை! குழந்தைகளுக்கு உணவு சமைப்பதில் சிக்கல்
/
அங்கன்வாடிக்கு தண்ணீர் இணைப்பில்லை! குழந்தைகளுக்கு உணவு சமைப்பதில் சிக்கல்
அங்கன்வாடிக்கு தண்ணீர் இணைப்பில்லை! குழந்தைகளுக்கு உணவு சமைப்பதில் சிக்கல்
அங்கன்வாடிக்கு தண்ணீர் இணைப்பில்லை! குழந்தைகளுக்கு உணவு சமைப்பதில் சிக்கல்
ADDED : பிப் 25, 2025 10:34 PM
வால்பாறை, ; அங்கன்வாடி மையத்திற்கு தண்ணீர் வினியோகம் இல்லாததால், குழந்தைகளுக்கு உணவு சமைக்க முடியாமல் ஊழியர்கள் தவிக்கின்றனர்.
வால்பாறை நகரில் உள்ள, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 280 மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் சத்துணவு மையம், அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது.
இந்நிலையில், சத்துணவு மையத்தில் தண்ணீர் இல்லாததால், மாணவியருக்கு மதிய சத்துணவு சமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, கடந்த நவம்பர் மாதம், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் உடனடியாக சத்துணவு மையத்திற்கு தனி குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இதே பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. மையத்தில் 20 குழந்தைகள் படிக்கின்றனர். அங்கன்வாடிக்கு குடிநீர் இணைப்பு இது வரை வழங்கப்படவில்லை. இதனால் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு சமைக்க தண்ணீருக்காக ஊழியர்கள் அலைமோதுகின்றனர்.
அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது: அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், தண்ணீர் இணைப்பு இல்லாததால், அருகில் உள்ள சத்துணவு மையத்தில் இருந்து நாள் தோறும் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து சமைக்கிறோம். அங்கன்வாடி மையத்திற்கு தனி குடிநீர் குழாய் இணைப்பு வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அங்கன்வாடி மையத்துக்கு தண்ணீர் இணைப்பு இல்லாதது குறித்து, எங்களுக்கு இது வரை எந்த புகாரும் வரவில்லை. இணைப்பு வேண்டுமென, மனு கொடுத்தால், அங்கன்வாடி மையத்திற்கு நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்,' என்றனர்.